(FASTGOSSIP| COLOMBO) – போதை வர்த்தகத்துடன் தொடர்புடைய 13 கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென, சர்வதேச பொதுமன்னிப்புச் சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
ஜூன் 21ஆம் திகதியிலிருந்து ஜூலை 01ம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ள சர்வதேச போதை ஒழிப்பு தினத்துக்குள் போதை வர்த்தகத்துடன் தொடர்புபட்டு, மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இத்தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 4 குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனையை நிறைவேற்றுவது குறித்த ஆவணத்தில் நேற்று(26) ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாகவும் அச்சபை தெரிவித்துள்ளது.
எனவே இத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ள அனைத்து திட்டங்களையும் நிறுத்துமாறு, சர்வதேச மன்னிப்புச் சபை பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறு மரணத் தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் இலங்கையை போதைப்பொருள் தொடர்பான குற்றங்களிலிருந்து மீட்டெடுக்க முடியாதென, சர்வதேச பொதுமன்னிப்புச் சபையின் தெற்காசிய வலய பணிப்பாளர் பிராஜ் பட்நைக் அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளார்.