14ம் திகதி ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்

இம்முறை வரவு-செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களின் உரிமைகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள் சங்கங்களின் ஒன்றியம் வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய பிரதான கட்சிகளைச் சேர்ந்த 23 தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாமை, ஓய்வூதிய கொடுப்பனவு நீக்கப்பட்டமை உட்பட பல்வேறு ஊழியர்களின் உரிமைகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகவும், இவற்றைப் பெற்றுக் கொள்ள வேலை நிறுத்தம் தவிர வேறு வழியில்லையெனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இன்னும், வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கு முன்னர் இன்று நண்பகல் 12 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தவுள்ளதாகவும் அவ்வமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.