உறையவைக்கப்பட்ட கரு முட்டை மூலம் தாயான உலக அழகி

உறையவைக்கப்பட்ட கரு முட்டை மூலம் தாயான உலக அழகி

முன்னாள் உலக அழகியான இந்தியாவின் டயானா ஹைடன் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சேகரிக்கப்பட்ட தனது கரு முட்டை மூலம், தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

ஆங்கில இந்தியன் வம்சத்தைச் சேர்ந்த ஹைடன் கடந்த 1997 ஆம் ஆண்டு இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் அதே ஆண்டு அவர் உலக அழகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 24.

ஹைதரபாத்தை பூர்விகமாக கொண்ட ஹைடன் நடிப்பு, விளம்பரம், மாடலிங் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டதால் தனது திருமணத்தை தள்ளிவைத்தார். அப்போது 2007 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலத்தில் தனது 16 கரு முட்டைகளை, யால்சேட்கர் என்னும் மகப்பேறு மருத்துவரிடம் சேகரித்து வந்தார்.

மருத்துவர் யால்சேட்கர் தனது சக மருத்துவர் ரிஷிகேஷ் பாயுடன் இணைந்து, கரு முட்டைகளை உறையவைத்து சேகரிக்கும் தொழில்நுட்பத்தின்படி ஹைடனின் முட்டைகளை பாதுகாத்து வந்தனர்.

பின்னர் 2013 ஆம் ஆண்டு ஹைடன், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த காலின் டிக் என்பவரை திருமணம் முடித்தார்.

இதையடுத்து குழந்தை பெற விரும்பிய ஹைடன், தான் சேகரித்து வைத்திருந்த கரு முட்டை மூலம் தாய்மை அடைந்தார்.

பின்னர் கடந்த 9 ஆம் திகதி மும்பை சாந்தா குரூஸ் பகுதியில் உள்ள சூரியா மருத்துவமனையில், தனது 42 வயதில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஹைடன்.

இதுகுறித்து மருத்துவர் புபேந்திர அஸ்வதி கூறியதாவது:

உறையவைக்கப்பட்ட கரு முட்டை மூலம் ஹைடன் குழந்தை பெற்றுள்ளது புதிய முயற்சியாகும். வேலைக்கும் குடும்பத்துக்கும் இடையே சிக்கி தவிக்கும் பெண்களுக்கு இந்த தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதமாகும் என்றார்.

ஹைடனின் குழந்தைக்கு ஆர்யா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அக்குழந்தை வழக்கமான குழந்தைகளின் எடை, உயரத்தைவிட அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். குழந்தை ஆர்யா பிறக்கும் போது 3.7 கிலோகிராம் எடையுடன், 55 செ.மீ. உயரம் இருந்ததாக கூறினர்.