இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இலங்கை அணி போராடி தோல்வியைத் தழுவியது யாவரும் அறிந்ததே.
டெல்லியில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்களை எடுத்தது.
இதன் பின்னர் 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணியில் சந்திமால் (1), டில்ஷான் (2), சிறிவர்த்தனே (7), திரிமன்னே (3) என அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் 15 ஓட்டங்களுக்கே இலங்கை 4 விக்கெட்டை இழந்து தவித்தது. அதன் பின்னர் கபுகெடெரா (30), மேத்யூஸ் இருவரும் அதிரடியில் களமிறங்க இலங்கை வெற்றி இலக்கை நோக்கி பயணித்தது.
அணித்தலைவர் மேத்யூஸ் (73) கடைசி வரை தனியாளாக போராடினார். இருப்பினும் இலங்கை அணியால் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 161 ஓட்டங்களே எடுக்க முடிந்தது.
இதனால் 10 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி தொடரை விட்டு வெளியேறியது.
இந்த தோல்வி குறித்து இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறுகையில், “நாங்கள் முதல் 6 ஓவரில் சிறப்பாக பந்துவீசினோம். ஆனால் அதன் பிறகு அதிக ஓட்டங்களை வாரி வழங்கிவிட்டோம்.
நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றம் கண்டு வந்தோம். அணியில் அதிகமாக அனுபவமற்ற இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் தற்போது கற்றுக் கொள்ளும் நிலையிலே உள்ளனர்.
மேலும், அணியில் உள்ள சீனியர் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை“ என்று வருத்தமாக கூறியுள்ளார்.
அதேசமயம் கடைசி வரை அணியின் வெற்றிக்காக போராடிய மேத்யூசை இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மோர்கன் பாராட்டியுள்ளார்.