20 வருடங்களுக்கு பின்னர் நடிகர் கமல் ஹாசன் vs ராணி எலிசபெத் சந்திப்பு… [PHOTOS]

லண்டனில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து இடையிலான கலாசார விழாவில் இந்திய சார்பில் பங்கேற்ற நடிகர் கமல் ஹாசன் ராணி எலிசபெத்தை சந்தித்தார்.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான கலாசார ஆண்டு வரவேற்பு விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடந்தது. விழாவை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் நடிகர் கமல் ஹாசன் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் ராணி எலிசபெத்தை சந்தித்தார். அப்போது இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.

சரித்திர கதையம்சத்தை கொண்ட கமல் ஹாசனின் லட்சியப்படமான ‘மருதநாயகம்’ படப்பிடிப்பு 1997-ம் ஆண்டு இந்தியாவில் நடந்தபோது, அதனை ராணி எலிசபெத் தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. யுத்த காட்சிகளுடன் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் நிதி நெருக்கடியால் பட வேலைகள் திடீரென்று நிறுத்தப்பட்டது.

மருதநாயகம் படத்தை தொடர்ந்து படமாக்கும் முயற்சியில் கமல் ஹாசன் ஈடுபட்டு வருகிறார். ராணி எலிசபெத்தை சந்தித்த போது மருதநாயகம் படப்பிடிப்பில் கலந்து கொண்டதை கமல் ஹாசன் நினைவூட்டினார். இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து இளவரசர்கள் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.