2010 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் ஊழல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை தென்னாபிரிக்க கால்பந்தாட்ட சபை மறுத்துள்ளது

2010 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் ஊழல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை தென்னாபிரிக்க கால்பந்தாட்ட சபை மறுத்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் போது 10 மில்லியன் அமெரிக்க டொலர் ஊழல் இடம்பெற்றதாக புலன் விசாரணையாளர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக்குற்றச்சாட்டினை தென்னாபிரிக்க கால்பந்தாட்ட சபை மறுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தென்னாபிரிக்க கால்பந்தாட்ட சபையின் தொடர்பாடல் இயக்குநர், ஆதாரமற்ற பரிசோதிக்கப்படாத குற்றச்சாட்டுக்களால் தாம் வருந்துவதாகவும் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் இருந்தால் அதனை முன்வைத்து தம்மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

கடந்த 20 வருடங்களாக சர்வதேச கால்பந்தாட்ட சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து FIFA மூத்த அதிகாரிகள் 9 பேர் உள்ளிட்ட 14 பேர் சூரிச்சில் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது கடந்த 2010 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளை நடத்தும் நாடாக தென்னாபிரிக்கா தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கு முன்னாள் FIFA துணைத்தலைவர் ஜக் வோர்னருக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சமாக வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இக் குற்றச்சாட்டினை ஜக் வோர்னரும் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.