வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில், மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் புனானைப் பகுதியில் நேற்று (14.06.2015) காலை வான் வேகக்கட்டுப்பாட்டையிழந்து தடம்புரண்டதில் ஆறு பேர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு காஞ்சிலங்குடாப் பகுதியைச் சேர்ந்த குடும்பமொன்று கொழும்பிற்குச் சென்று மீண்டும் தங்களது பிரதேசத்திற்கு வருகை தந்து கொண்டிருந்த வேளையிலேயே நேற்று காலை 06.00 மணியளவில் இச்சம்வம் இடம் பெற்றுள்ளது.
இவ்விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் சாரதி அடங்கலாக ஆறு பேர் காயமடைந்துள்ளதுடன், இதில் மூன்று சிறுவர்களும் இரண்டு பெண்களும் அடங்குவதாகவும் சாரதியைத்தவிர மற்றைய அனைவரும் மேலதிக சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சாரதி வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வாகனத்தின் சாரதியின் தூக்கம் காரணமாகவே இவ்விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வருவதாகவும், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடாத்தி வருவதாகவும் வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.