அடுத்த ஒலிம்பிக் (2016) போட்டிக்கான மைதானங்கள் இன்னும் தயாராகாமல் உள்ளது.
உலக விளையாட்டு திருவிழா ஒலிம்பிக் போட்டி. நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும்.
கடைசியாக 2012ல் இங்கிலாந்தின் லண்டனில் இப்போட்டி நடந்தது. அடுத்து 2016ல் 31வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 5 முதல் 21 வரை நடக்கவுள்ளது. இதற்காக மொத்தம் 14 புதிய மைதானங்கள் கட்டுவது, புதுப்பிப்பது என, ரூ. 51 ஆயிரத்து 518 கோடி வரை பிரேசில் அரசு செலவிடுகிறது.
போட்டி துவங்க இன்னும் 13 மாதங்கள் மட்டும் மீதமுள்ள நிலையில் பெரும்பாலான பணிகள் முடியாமல் உள்ளன.
இங்குள்ள ஒலிம்பிக் பார்க் மைதானம் 44 ஏக்கரில் தயாராகிறது. ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, சைக்கிளிங் உட்பட மொத்தம் 16 விளையாட்டுகள் இங்கு நடக்கும்.
ஆனால், மைதானத்தில் இன்னும் கான்கிரீட் குப்பைகள், இரும்பு பைப்புகள், மணல் மற்றும் சல்லிகள் என, கட்டுமானப் பொருட்களாகத் தான் காட்சி தருகிறது.
10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் டென்னிஸ் மைதான பணி பாதி தான் முடிந்துள்ளது. சுமார் ரூ. 400 கோடியில் உருவாகும் 16 போட்டிகள் நடக்கவுள்ள ஒரு மைதானம், வரும் டிசம்பருக்குள் தயாரானால் மட்டுமே, பயிற்சி போட்டிகள் நடத்த முடியுமாம்.
துவக்கவிழாவுக்காக கடந்த 2014ல் உலக கோப்பை கால்பந்து பைனல் நடந்த மரக்கானா மைதானம் ரூ. 3,536 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது. இருக்கைகளின் எண்ணிக்கை அப்படியே இரு மடங்கு (78,000) அதிகரிக்கப்படும். இது எப்போது தயாராகும் என்றே தெரியவில்லை.
ஒலிம்பிக் பணிகளில் ஈடுபட்டுள்ள 2000 தொழிலாளர்கள், சம்பள உயர்வு கேட்டு கடந்த ஆண்டில் இரண்டு வாரம் வேலை நிறுத்தம் செய்தனர். இதுவும் ஒரு பாதிப்பாகி விட்டது.
15 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட ஹாக்கி மைதானத்திற்கு அடித்தளம் மட்டும் தான் கட்டியுள்ளனர்.
போக்குவரத்து வழிகள், பாலங்கள், வீரர்கள் மட்டும் செல்லும் பாதைகள், ஒலிம்பிக் மைதானத்துக்கு வருபவர்களுக்கான புதிய பஸ் ஸ்டாண்டு என, பல பணிகள் அப்படியே உள்ளன.
இந்த வேலைகளால் ரியோ டி ஜெனிரோ மேயர் எடுவார்டோ பயஸ் துாக்கத்தை தொலைத்து விட்டாராம். இவர் கூறுகையில்,‘‘ ஒலிம்பிக் வேலைகளை தினசரி கவனித்து வருகிறேன். இதில் எவ்வித தவறுகளுக்கும் இடம் கொடுத்து விட மாட்டோம். இந்த பணிகளால் எனது துாக்கமே போய்விட்டது,’’ என்றார்.