பதவிக் காலம் முடிவடைந் துள்ள மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலையும் அடுத்த ஆண்டில் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கிழக்கு, வடமத்திய, சப்பிரகமுவ மாகாணசபைகளில் பதவிக் காலங்கள் முடிவடைந்துள்ளன. குறித்த பதவிக் காலம் முடிவடையும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டிருந்தது.
20ஆவது திருத்தச் சட்ட வரைவின் ஊடாக அதனை ஒத்திப்போடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தையடுத்து 20ஆவது திருத்தச் சட்டவரைவைக் கைவிட்ட அரசு, மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்து, சட்டவரைவை நிறைவேற்றியது.
இதனூடாக மாகாணசபைகளுக்கான எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாகாணசபைகளுக்கான தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அதற்கு பதிலளிக்கையில் அவர்; “..அடுத்த ஆண்டிலும் தேர்தல் நடப்பதற்கான சாத்தியம் 50% இற்கும் குறைவாகவே உள்ளது. புதிய மாகாண சபை திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உத்தேசிக்கப்பட்டுள்ள எல்லை மீள் நிர்ணயக்குழுத் தேர்தல் தொகுதிகளை வரையறுக்கும் பணிகளை முடிக்க வேண்டும். அதன்பின் முழு விடயமும் மீளாய்வு செய்யப்பட்டு, குறைகள் திருத்தப்பட வேண்டும்.
இந்த நடைமுறை கள் அனைத்தும் முடிந்து அடுத்த வருடம் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது..’ என தெரிவித்திருந்தார்.
(rizmira)