2018 ஆம் ஆண்டுக்கான, பாட நூல்களின் தேவைப்பாடு 41,189,027 ஆக காணப்படும் அதேவேளை, 28,210,600 பாட நூல்களை மாத்திரமே அச்சிடப்பட்டிருப்பதனால், பாடநூல்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின், செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அச்சிடப்பட்டுள்ள பாட நூல்களுள், ஆசிரியர்களின் கற்பித்தலுக்கான பாடநூல்கள் உள்ளடக்கப்படவில்லை எனவும், ஆசிரியர்கள் தமது கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, பாடநூல்கள் வழங்கப்படாமையின் காரணமாக, பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் எனவும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சிடப்பட்ட 28,210,600 பாட நூல்களில் 1-4 வரையான வகுப்புகளுக்கு தேவையான பாட நூல்கள் 8,802,100, 9 ஆம் தரத்துக்கு தேவையான பாடநூல்கள் 6,432,000, செயல் நூல்கள் 2,630,000 அச்சிட வேண்டிய நிலையில், மிகக் குறைந்தளவிலான பாட நூல்களே இம்முறை அச்சிடப்பட்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.