2018 ஆம் ஆண்டு முதல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்திட்டம்..

புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் மூலமான கொடுப்பனவுகள் அடுத்தவருடம் வழங்கப்படும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நிதி அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கான உத்தேச ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதமளவில் கொடுப்பனவுகளை வழங்கக்கூடியதாக இருக்குமென்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தம்மை பதிவு செய்து கொண்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்ற இடத்தில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட 38 பேருக்கு நேற்று(16) இழப்பீடுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது ஒரு கோடி ரூபாவுக்கு மேலான தொகை இழப்பீடாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து வெளிநாடுகளிற்கு வேலை செய்வதற்காக சென்ற தொழிலாளர்களில் பலர் சிரமங்களை எதிர்கொண்டனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இந்தவருடம் இரண்டு கோடி ரூபாவுக்கு மேலான தொகை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதென்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.