2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிக்கான நேரடி வாய்ப்பினை இழந்தது இலங்கை அணி..

இந்திய அணிக்கு எதிரான நான்காம் ஒருநாள் போட்டியிலும் இலங்கை கிரிக்கெட் அணி தோல்வியையே எதிர்நோக்கியுள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று(31) நடைபெற்ற குறித்த இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி முதலில் துடுப்பாட தீர்மானித்தார்.

இலங்கை அணி சார்பில் ஏஞ்சலோ மேத்யூஸ் இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

அதேநேரம் நேற்றைய போட்டியில் விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் இலங்கை அணிக்கு தலைவராக செயற்பட்ட லசித் மலிங்க, ஒருநாள் போட்டிகளில் தமது 300வது விக்கட்டை பெற்றார்.

376 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி, 42.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 168 ஓட்ட வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இது இலங்கை அணி, சொந்தமண்ணில் பெற்ற அதிகூடிய ஓட்ட வித்தியாச தோல்வியாக பதிவாகியுள்ளது.

அத்துடன் இந்த தோல்வி இலங்கை அணி தொடர்ந்து பெறும் ஆறாவது தோல்வியாகும்.

இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிக்கு நேரடியாக தெரிவாகும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது.

இந்திய அணியுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்தமையே இதற்கு காரணம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது.

 

(rizmira)