சூதாட்ட புகாரில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வரும் 2019 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடுவது தான் என் கனவு என தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பில் விளையாடிய கேரளாவை சேர்ந்த ஸ்ரீசாந்த் மற்றும் அஜீத் சண்டிலா, அங்கீத் சவான் ஆகிய 3 வீரர்களும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீசாந்த் உள்பட 3 பேரையும் விடுதலை செய்ய தீர்ப்பு அளித்தார்.
இதைத்தொடர்ந்து ஸ்ரீசாந்த் தனது சொந்த ஊரான கொச்சியில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் வெளியான தீர்ப்பு தொடர்பாகவும் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பாகவும் பேட்டி அளித்துள்ள அவர் “ 2019 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி இந்தியாவிற்கு கோப்பையை பெற்று தருவது தான் என் கனவு. இது நம்புவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் என் மீதும் என் திறமை மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளேன். அந்த நம்பிக்கைதான் என்னை இரண்டு உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிய முதல் கேரள கிரிக்கெட் வீரர் என்ற பெயரை பெற்று தந்துள்ளது எனத் தெரிவித்தார்.
நான் இந்தியா கிரிக்கெட் வாரிய மைதானங்களில் பயிற்சி எடுத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொச்சியில் உள்ள பல்வேறு மைதானங்களில் விளையாடிதான், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக மாறினேன். திரும்பவும் அதே மைதானங்களுக்கு திரும்பி செல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(riz)