2020ம் ஆண்டை நோக்கிய புதிய பாதையில் கூட்டுறவுத்துறை..

நூறு வருட பழமை வாய்ந்த இலங்கையின் கூட்டுறவுத் துறையை மறுசீரமைத்து நவீனத்துவப்படுத்தும் வகையிலான 2020ம் ஆண்டை நோக்கிய புதிய பாதை ஒன்றுக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

95வது சர்வதேச கூட்டுறவுத் தின விழா குருணாகலில் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிஷாத்;

“..கூட்டுறவுத்துறையானது இலங்கையின் 3வது பொருளாதார சக்தியாகத் திகழ்கின்றது. விவசாயத்துறை, பெண்களின் அபிவிருத்தி, காப்புறுதி, சிறிய மற்றும் நடுத்தர தொழில், கிராமிய வங்கி மற்றும் பல்வேறு வகையான உற்பத்திகள் அடங்கிய சுமார் 14,500 கூட்டுறவுத்துறை சார் நிறுவனங்கள் நமது நாட்டில் இயங்கி வருகின்றன.

இவற்றில் சுமார் 46,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். நாட்டின் அதிகளவிலான உறுப்பினர்களைக் கொண்ட சந்தை முறைமை கூட்டுறவுத்துறையிலேயே இருக்கின்றது.

நவீன தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இந்த வலையமைப்புக்குள் இளைஞர்களை உள்ளீர்ப்பு, செய்து விவசாயம் மற்றும் வேறு கூட்டுறவுத்துறை தொடர்பான விடயதானங்களை பலப்படுத்துவதற்கு புதிய மறுசீரமைப்புத் திட்டம் வழிவகுக்கப்படும்..” எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

(rizmira)