(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
கொழும்புத் துறைமுகத்திலிருந்து உரிமையாளர்களினால் விடுவிக்கப்படாத 2 கோடி ரூபா பெறுமதியான 24,000 கிலோ அப்பிள் பழங்கள் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கையளித்தார்.
சீனாவிலிருந்து வந்திருந்த அப்பிள் கொள்கலனொன்றில் கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்திற்கு கொண்டு செல்லப்படாமல் அமைச்சரின் தலையீட்டில் மிருகக்காட்சிசாலையில் கையளிக்கப்பட்டது.
இந்த 24 ஆயிரம் கிலோவில் சுமார் ஒரு இலட்சம் அப்பிள்கள் இருந்தன.
இவ்வாறு துறைமுகத்திற்கு கொண்டு வரப்படும் உணவுகள் அல்லது ஏனைய பொருட்கள் அழிக்கப்படுவதற்கு இடமளிக்காமல் ஏதாவது பயனுள்ள நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
குறித்த சரக்குகளின் பெறுமதி சுமார் 2 கோடி ரூபாவாகும் என துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் பிரபாத் ஜயந்த தெரிவித்துள்ளார்.
அப்பிள்களை இறக்குமதி செய்த வர்த்தகர், வரிச்சுமை காரணமாக அப்பிள்களை துறைமுகத்திலிருந்து விடுவித்து, சந்தையில் விற்று இலாபம் ஈட்டிக்கொள்ள முடியாது என்று துறைமுக அதிகார சபை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே அமைச்சரின் தலையீட்டினால் இந்த அப்பிள் பழங்கள் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.