25 இலட்சம் பெறுமதியில் புகையிரத நிலையத்தில் டிஜிட்டல் கால அட்டவணை – எவ்விதப் பயனும் இல்லை

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல் முறையிலான கால அட்டவணை பலகை தொழிற்படாமல் உள்ளதாக அகில இலங்கை புகையிரத பொது சேவையாளர் சங்கம் குற்றஞ் சுமத்தியுள்ளது.

கடந்த இரண்டு வார காலமாக இது தொழிற்படாமல் இருப்பதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் பெறுமதி ஒருகோடியே 25 இலட்சம் என்றும் குறித்த கால அட்டவணையானது 2014ஆம் ஆண்டு பொருத்தப்பட்டதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த கால அட்டவணைப் பலகையில் புகையிரதம் வரும், புறப்படும் நேரம் உள்ளிட்ட விடயங்கள் காட்சிப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த கால அட்டவணைப் பலகைக்காக 15 இலட்சம் மாத்திரமே செலவாகும் என புகையிரத தொழிநுட்ப அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இவ்வாறு இலட்சங்களை செலவழித்து கால அட்டவணை பலகை பொருத்தினாலும் அதை உரிய முறையில் பராமரிப்பதற்கு யாரும் முன் வருவதில்லை என அகில இலங்கை புகையிரத பொது சேவையாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இந்த டிஜிட்டல் கால அட்டவணைப் பலகை தொழிற்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் அந்தச் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.