ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க பயன்படுத்திய குறிப்புப் புத்தகத்தை இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்கிஸ்ஸ நீதிமன்றில் நேற்று லசந்த கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன் போது லசந்தவின் குறிப்புப் புத்தகத்தை பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு நீதவான் மொஹமட் சஹாப்தீன் உத்தரவிட்டுள்ளார்.
இராணுவத் தளபதிக்கு இடப்பட்ட உத்தரவின் அடிப்படையில் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்,அதில் சிலவற்றைக் காணவில்லை எனக் கூறப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விசாரணை செய்ய இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதியின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளுக்கு இராணுவத் தரப்பில் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லசந்த பயன்படுத்திய குறிப்புப் புத்தகத்தில் தம்மை பின்தொடர்ந்த மோட்டார் சைக்கிள் இலக்கங்களை குறிப்பிட்டுள்ளார், அது பற்றிய விபரங்கள் முன்னதாக காணப்பட்ட போதிலும் தற்போது அவை இல்லை என லசந்தவின் குடும்பத்தினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அதுல ரணகல தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எனவும் பின்னர் நுவரெலியா வங்கியொன்றின் ஊடாக சம்பளம் ஏனைய அனைத்து கொடுப்பனவுகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் லசந்த கொலை தொடர்பிலான வழக்கு தற்போது சரியான பாதையில் நகர்வதாக உணர முடிகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்புப் புத்தகத்தின் கையெழுத்துக்களை பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து அறிக்கைகளையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.