3ஆவது டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து அணி 416 ஓட்டங்களுடன் சுருண்டது

இலங்கைக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 416 ஒட்டங்களை எடுத்துள்ளது.

முன்னதாக, வியாழக்கிழமை நடைபெற்ற முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 279 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அன்றைய தினத்தில் அலாஸ்டர் குக் அரைசதம் கடந்து 85 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோ சதம் கடந்து 107 ஓட்டங்களுடனும், கிறிஸ் வோக்ஸ் 23 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் பேர்ஸ்டோ 167 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

அவர் மொத்தம் 18 பவுண்டரிகளை விளாசியிருந்தார். உடன் நின்றிருந்த வோக்ஸ், 66 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த இதர வீரர்கள் சொற்ப ஓட்டங்களிலேயே சுருண்டுவிட 416 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து.

பின்னர் தனது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி முதல் நாள் (வெள்ளிக்கிழமை) ஆட்டமுடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே 50 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கெஷல் சில்வா 79 ஓட்டங்களுடனும் , மென்டீஸ் 25 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.