கொரிய அரசாங்கம் இலங்கைக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கையில் இலங்கை நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி சமரதுங்க மற்றும் கொரியத் தூதுவர் சோன் ஸேம் வென் ஆகியோர் கையொப்பமிடும் நிகழ்வு நிதியமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் கொரியாவுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இந்த கடனுதவி வழங்கப்பட உள்ளது.
குறித்த கடன் தொகையை 10 வருட சலுகை காலத்துடன் 40 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்று நிதியமைச்சு கூறியுள்ளது.
இந்த நிதி கல்வி அபிவிருத்தி, கண்டி நகரப் போக்குவரத்து முறையை மேம்படுத்துதல், தேசிய போக்குவரத்து கல்வி பொறிமுறையை தயாரித்தல் ஆகியன உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளன.