கடனுக்கான வட்டி அதிகரிப்பு எனின் மீளவும் கடன் கேட்பது எதற்காக என சீனத் தூதுவர் ரவியிடம் கேள்வி..

சீனாவுக்கும் – இலங்கைக்கும் இடையில் தற்போதைய நல்லாட்சி அரசில் மீண்டும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இலங்கைக்கு சீனா வழங்கும் கடன்களுக்கான வட்டி தொடர்பில் இலங்கையின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்த குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்தே இந்த புதிய முரண்பாடு எழுந்திருக்கின்றது.

இலங்கை அரசாங்கம் சீரான கொள்கையை கொண்டிருக்க வேண்டும் எனவும் அரசாங்கம் மாற்றமடையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த கொள்கைகள் மாற்றமடையக் கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள கொழும்புக்கான சீனத் தூதுவர், சீரான கொள்கைகளை பின்பற்றத் தவறினால் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை இலங்கை அரசாங்கம் இழக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, சீனத் தூதுவர் யீ ஷியாங்லியாங், இலங்கைக்கு சீனா வழங்கிய கடன் அதிக வட்டிக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்த குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்தார்.

சீனா வழங்கும் கடன்களுக்கு அதிக வட்டி அறவிடுகின்றது என்றால் புதிதாக எதற்காக சீனாவிடம் கடனுக்காக இலங்கை விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை தொடர்பான தமது பங்களிப்பு மற்றும் தமது நாடு தொடர்பில் தவறான எண்ணப்பாடு இலங்கையிலுள்ள ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ள சீனத் தூதுவர், இலங்கை விடயத்தில் தமது நாட்டிற்கு எந்தவொரு மறைமுக நிகழ்ச்சி நிரல்களும் இல்லை என்றும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் தமது நாட்டு நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கென எந்தவொரு இலஞ்சமும் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது தமது நாட்டு அரசாங்கம் முன்வந்து உதவிகளை வழங்கியதாக கூறும் சீனத் தூதுவர், எந்தவொரு நாட்டினதும் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடுவது இல்லை எனவும் ஆட்சியிலுள்ள அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த கொள்கையின் அடிப்படையில் இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சீனா பணியாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

துறைமுக நகர திட்டத்தில் சீன நிறுவனத்துடன் எந்தவொரு நாடும் இணைந்து பணியாற்ற முடியும் எனக் குறிப்பிட்ட சீனத் தூதுவர், இந்த திட்டத்தினால் சுற்றாடலுக்கு தாக்கங்கள் ஏற்படும் என வெளியிடப்பட்ட அச்சத்தை அடுத்து, புதிய அரசாங்கத்தால் கொழும்பு நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு, அது மீண்டும் ஆரம்பிக்கப்படும் வரையான காலபகுதியில் 140 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை சீன நிறுவனம் எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்ற புதிய அரசாங்கம் கொழும்பு நகரத் திட்டத்தை இடைநிறுத்தியிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ள சீனத் தூதுவர், பொருளாதார ஒத்துழைப்பு விடயங்களை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என்றும் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் சீரான கொள்கையை கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள அவர், அரசாங்கம் மாற்றமடையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த கொள்கைகள் மாற்றமடையக் கூடாது எனவும் சீரான கொள்கைகளை பின்பற்றத் தவறினால் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை இலங்கை அரசாங்கம் இழக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

அத்துடன் அதிக வட்டிவீதத்தில் இலங்கைக்கு கடன்களை வழங்குவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களையும் சீன தூதுவர் நிராகரித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து எந்தவொரு தருணத்திலும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கலந்துரையாடவில்லை எனவும், அவ்வாறு கடன்களை பெறுவதில் மகிழ்ச்சி இல்லையாயின் பணத்திற்காக சீனாவை ஏன் இலங்கை தொடர்ந்தும் நாட வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கைக்கு 2 வீத வட்டி அடிப்படையிலேயே கடன்களை வழங்குவதாகவும் தெரிவித்துள்ள சீனத் தூதுவர், ஏனைய நாடுகளை போல் 5 வீத வட்டிக்கு கடனை இலங்கைக்கு வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீன தூதரகத்தினால் வழங்கப்படும் நிதி ஒத்துழைப்புக்கள் பெறுவதற்கு இலங்கையிலுள்ள பல்வேறு சமூகக் குழுக்கள்  முயற்சிப்பதாகவும் கூறும் அவர், அவ்வாறு நிதி வழங்கும் போது அதனை இலஞ்சமாக ஏனையவர்கள் நோக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையில் சீனா எந்தவொரு தவறான விடயங்களையும் செய்வில்லை என வலியுறுத்திக் கூறியுள்ள சீனத் தூதுவர், இலங்கையுடன் தமது நாடு கொண்டிருக்கும் நட்புறவுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.