தலைமைப் பதவியிலிருந்து தோனி விலகுகிறார்..

தலைமைப் பதவியிலிருந்து தோனி விலகுகிறார்..

சர்வதேச ஒரு நாள் மற்றும் டி20 அணிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியிலிருந்து விலக விரும்புவதாக மகேந்திர சிங் தோனி, இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், இங்கிலாந்துக்கு எதிரான பே.டி.எம் ஒரு நாள் கோப்பை மற்றும் பே.டி.எம் டி20 கோப்பை போட்டிகளுக்காக தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் பட்டியலில் தனது பெயரை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தலைவர் என்ற முறையில் இந்திய கிரிக்கெட்டின் அனைத்துப் பிரிவுகளிலும் தோனி ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி தெரிவிப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி கூறியுள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி பல சாதனைகளைப் புரிந்தது என்றும், அவை எப்போதும் இந்திய அணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தலைமைப் பதவியில் இருந்து தோனி விலகிவிட்டார். தற்போது டெஸ்ட் அணிக்கு, விராட் கோலி தலைவராக இருக்கிறார்.

ராஞ்சியைச் சேர்ந்தவரான 35 வயதான மகேந்திர சிங் தோனி, 283 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில், 199 போட்டிகளுக்கு தலைவராக பணியாற்றியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் நியுஸிலாந்தின் ஸ்டீஃபன் பிளெமிங்கிற்கு பிறகு தலைவராக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் தோனி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல், 73 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 72 போட்டிகளுக்கு தலைமைப்பதவி வகித்துள்ளார்.