4 துறைமுகங்களை பயன்படுத்த நேபாளத்துக்கு சீனா அனுமதி

சீனா தனது நாட்டில் உள்ள தியான்ஜின் ஷெங்ஷென், வியான் புங்காங், மற்றும் ஷான் ஜியாங் ஆகிய 4 துறைமுகங்களை நேபாளம் பயன்படுத்த சம்மதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய கடும் தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் அங்கு எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு பல மாதங்கள் கடும் தட்டுப்பாடு நிலவியது.

அதை தொடர்ந்து அண்டை நாடான சீனாவின் உதவியை நேபாளம் நாடியது. அதன் பின்னர் 2 நாடுகளும் நட்புறவு கொள்ள தொடங்கின. இந்த நிலையில் நேபாளமும், சீனாவும் வர்த்தகரீதியில் உறவை விரிவுபடுத்த முடிவு செய்தன.

அதுகுறித்து 2 நாடுகளுக்கும் இடையே சரக்கு மற்றும் போக்குவரத்து ஒப்பந்தம் காத்மாண்டுவில் நேற்று முடிவானது. அதன்படி சீனா தனது நாட்டில் உள்ள 4 துறைமுகங்களை நேபாளம் பயன்படுத்தி கொள்ள சம்மதித்தது.

அதே நேரத்தில் நேபாளம் தன்னிடம் உள்ள லாங்ஷூ, லாசா மற்றும் ஸஸிகாட்ஸ் பகுதியில் சாலைகளை பயன்படுத்திக் கொள்ள சீனாவுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் நடைமுறைக்கு வருகிறது.

இது நேபாள வரலாற்றில் முக்கிய மைல்கல் என அந்நாட்டு வர்த்தக மந்திரி ரா ‌ஷங்கர் சஞ்சு தெரிவித்துள்ளார். .