பாராளுமன்றில் தனக்கு உரையாடுவதற்கு வழங்கப்பட்ட நேரம் போதவில்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் கல்விக்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் அமைச்சர் விவாதித்து கொண்டிருந்தார்.
எனினும், திடீரென வழங்கப்பட்டுள்ள நேரம் முடிந்து விட்டது. உரையை நிறுத்தி கொள்ளுங்கள் என அவைக்கு தலைமை தாங்கிய செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் அறிவித்தல் விடுத்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் மேலதிகமாக தனக்கு 2 நிமிடங்கள் வழங்கும்படி கோரிக்கை விடுத்தார். எனினும் பாராளுமன்றத்தினால் அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் வெறும் 4 நிமிடங்களில் எவ்வாறு உரையை நிகழ்த்த முடியும். எதிர் காலத்தில் இந்த நிலையை மாற்றி அதிகளவான நேரத்தை ஒதுக்கி தாருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை இன்றைய விவாதத்தில் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக்கான வளங்கள் தொடர்பில் அமைச்சர் விவாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.