
சர்வதேச டென்னிஸ் போட்டியில் 100-வது வீரருடன் ஜோடி சேர்ந்தார் லியாண்டர் பெயஸ்
இந்திய ஜாம்பவான் 42 வயதான லியாண்டர் பெயஸ் கால் நூற்றாண்டு காலமாக டென்னிஸ் உலகில் சக்கரவர்த்தியாக விளங்கி வருகிறார். இரட்டையர் பிரிவில் 55 பட்டங்களை வென்றிருக்கும் லியாண்டர் பெயஸ் இப்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
விம்பிள்டனுக்கு முன்னோட்டமாக இங்கிலாந்தின் நாட்டிங்காமில் தொடங்கியுள்ள ஏகான் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் லியாண்டர் பெயஸ், மார்சல் கிரானோலர்சுடன் (ஸ்பெயின்) ஜோடி சேர்ந்து களம் இறங்கினார். இவர்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் 3-6, 6-2, 11-9 என்ற செட் கணக்கில் டிரிட் ஹூய் (பிலிப்பைன்ஸ்)- ஸ்காட் லிப்ஸ்கி (ஜெர்மனி) இணையை தோற்கடித்தனர். ஆனால் கால்இறுதியில் பெயஸ்-கிரானோலர்ஸ் ஜோடி 4-6, 6-3, 7-10 என்ற செட் கணக்கில் போராடி கிறிஸ் குசியோன் (ஆஸ்திரேலியா)-ஆந்த்ரே சா (பிரேசில்) இணையிடம் நேற்று வீழ்ந்தனர்.
29 வயதான மார்சல் கிரானோலர்ஸ், ஆண்கள் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயசுடன் கைகோர்த்துள்ள 100-வது ஜோடி ஆவார். 1990-ம் ஆண்டு முதல்முறையாக இந்தியாவின் ஜீசன் அலியுடன் ஜோடி சேர்ந்த லியாண்டர் பெயஸ், பாட்னர்ஷிப்பில் இப்போது ‘செஞ்சுரி’ அடித்து வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். இந்த சாதனை பட்டியலில் ஏ.டி.பி. சர்வதேச தொடர், ஐ.டி.எப். சேலஞ்சர், டேவிஸ் கோப்பை, ஒலிம்பிக், கிராண்ட்ஸ்லாம் உள்ளிட்ட போட்டிகள் கணக்கிடப்பட்டுள்ளன. அதே சமயம் ஆசிய விளையாட்டு, காமன்வெல்த், சாம்பியன்ஸ் டென்னிஸ் லீக் என்று ஏ.டி.பி. அமைப்பு அங்கீகரிக்காத போட்டிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
பல்வேறு வீரர்களுடன் கூட்டணி அமைத்ததில் சதம் கண்ட 47-வது வீரர் லியாண்டர் பெயஸ் ஆவார். சான்டர் குரோயின் (நெதர்லாந்து) அதிகபட்சமாக 168 வெவ்வேறு வீரர்களுடன் ஜோடி சேர்ந்து இந்த வரிசையில் முதலிடம் வகிக்கிறார்.
சாதனை குறித்து பேசிய முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரமான லியாண்டர் பெயஸ், ‘இது, நான் மிக நீண்ட காலம் டென்னிஸ் விளையாடி வருவதையே காட்டுகிறது. புதிய வீரர்களுடன் ஜோடி சேரும் போது, நிறைய புதிய யுக்திகளை கற்றுக்கொண்டு, அதை களத்தில் செயல்படுத்த முயற்சிக்கிறேன். இதே போல் அவர்களும் என்னிடம் இருந்து கற்றுக்கொள்கிறார்கள். மொத்தத்தில் 25 ஆண்டுகள் மற்றும் 100 ஜோடி என்பது ஆசீர்வதிக்கப்பட்ட பயணமாக உணருகிறேன். எனது ஜோடிகளை தேர்வு செய்வதில் நான் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். ஏனெனில் எனது பலவீனம் எதுவுவோ அதில் அவர் திறமைசாலியாக இருக்க வேண்டும். இதே போல் அவரது பலவீனத்தை சரி செய்யக்கூடிய திறமை என்னிடம் இருக்க வேண்டும். அப்போது தான் களத்தில் சாதிக்க முடியும் ’ என்றார்.
கடந்த மாதம் பிரெஞ்ச் ஓபனின் போது, லியாண்டர் பெயஸ் இரட்டையரில் 700 வெற்றிகளை கடந்தது நினைவு கூரத்தக்கது. இவரது சாதனை மகுடத்தில் 8 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் மகுடமும் அடங்கும். இதில் சக நாட்டவர் மகேஷ் பூபதியுடன் இணைந்து 3 கிராண்ட்ஸ்லாமும், செக்குடியரசு நாட்டை சேர்ந்த ராடக் ஸ்டெபனக், லுகாஸ் லோகி ஆகியோருடன் சேர்ந்து தலா 2 கிராண்ட்ஸ்லாமும், மார்ட்டின் டாமுடன் ஒரு கிராண்ட்ஸ்லாமும் ருசித்துள்ளார்.
கலப்பு இரட்டையரில் அவர் 24 மங்கைகளுடன் ஜோடி சேர்ந்து ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.