ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட புதிய தீவினை ஒருபோதும் சீனாவிற்கு விட்டுக்கொடுக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அப்பகுதியில் துறைமுகம் அமைக்கப்பட்ட போது, அங்கிருந்து அகழப்பட்ட மண், மற்றும் கற்களை குவித்து 45 ஹெக்ரெயர் பரப்பளவில் செயற்கை தீவு ஒன்று அமைக்கப்பட்டது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் முடிவு செய்து வருகின்ற நிலையில், அவற்றினை நிறைவேற்றும் வகையிலான பேச்சு வார்த்தைகளை தற்போதும் நடாத்தி வருகின்றது.
சீன மேர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் குறித்த செயற்கை தீவு தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில், சீனா அரசாங்கத்துக்கு குறித்த தீவை விட்டுக்கொடுப்பதற்கு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இந்த செயற்கைத் தீவு சீனாவின் கடன் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படவில்லை என்றும் எனவே இதனை தனியார் மயப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்றும், துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த செயற்கை தீவினை சுற்றுலா மையமாக்கப் போவதாகவும் அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.