மைத்ரி ஆண்டாலும் மஹிந்த ஆண்டாலும் முஸ்லிம்களை பொறுத்தவரை

நல்லாட்சியின் 1௦௦ நாள் வேலைத்திட்டத்துடன் ஆரம்பமான சிறுபான்மை ஆட்சி பலத்தை கொண்ட பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது. கடந்த ஆட்ச்சிக்காலத்தில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான கெடுபிடிகள் எல்லை மீறிய நிலையில், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான செயற்பாடுகளை தேர்தல் பிரச்சாரத்தின் பிரதான பேசுபொருளாக சந்தைப்படுத்தியே இந்த நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்தது. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் 95 வீதமான வாக்குகள் இன்நல்லாட்சி அரசிற்கு வழங்கப்பட்டதாக அடிக்கடி கூறப்படுகின்றது. அதுதான் உண்மையும் கூட.

மஹிந்த அரசின் முஸ்லிம் விரோத போக்கினால் வெறுப்பின் உச்சிக்கே சென்றிருந்த முஸ்லிம்கள் தருணம் பார்த்து பழிதீர்க்க, கடந்த ஜனாதிபதி தேர்தலை வாய்ப்பாக்கிக் கொண்டார்கள். ஆட்சி மாற்றத்திற்கு திட்டம் போட்டவர்கள் (சந்திரிக்கா,மங்கள,ராஜித) கூட சிறுபான்மை சமூகங்களின் வாக்கு வங்கியை தமது பிரதான வாக்கு வங்கியாக கணக்கில் கொண்டே வியூகங்களை வகுத்தார்கள்.

கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையின் பிரதான அங்கத்தவர்கள் உட்பட பிரபல பாராளுமன்ற உறுப்பினர்கள் 57 பேர் தம்முடன் இணையவுள்ளதாக மேற்சொன்ன ஆட்சி மாற்றத்தின் சூத்திரதாரிகளால் அடிக்கடி மேடைகளில் முழங்கப் பட்டாலும் சுமார் நான்கு பேருடன் குறிப்பிட்ட கட்சித்தாவல் ஸ்தம்பிதம் அடைந்தது.இதற்கான பிரதான காரணம் முஸ்லிம் கட்சித்தலைவர்கள் இவ்விடயத்தில் தீர்க்கமானதொரு முடிவை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாகும். நாட்டின் பிரதான அரசியல் அவதானிகள் அரசியல் தலைமைகளுக்குட்பட பல்வேறு மட்டத்தினராலும் எதிர்பார்க்கப்பட்ட முஸ்லிம் கட்சித்தலைமைகளின் தீர்க்கமான முடிவு ஆட்சி மாற்றத்திற்கான பிரதான எடுகோளாக கருதப்பட்டதே இதற்கான காரணமாகும்.

இந்தத் தருணத்தில் தான் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தமது முடிவை அறிவித்தார். பொது பால சேனா போன்ற இனவாத அமைப்புக்களால் கடந்த காலங்களில் தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடைபெற்று வந்த இனவாத செயல்களுக்கு எதிராக, பொறுப்புள்ள ஒரு அரசாங்கம் என்ற வகையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத அரசாங்கத்திற்கு எதிராக, மைத்ரி ஆட்சிக்கு ஆதரவளிப்பதாக தமது முடிவை அறிவித்தார். உண்மையில் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக கருதப்பட வேண்டியதாகும்.அப்போதைய மஹிந்த அரசாங்கத்தின், பலம் பெரும் சக்தியாக இருந்த அவரது மஹிந்த குடும்பத்தினரின் பெரும் எதிர்பார்ப்பாகவும் இருந்தார். தமக்கு வாக்களித்த மக்களின் மீள்குடியேற்ற விடயங்களில் பல சாதகமான முன்னெடுப்புகளை செய்து வந்த இவர் அப்போதைய வடக்கு வசந்தம் செயற்திட்டத்தின் கர்த்தாவான பசில் ராஜபக்ஷவுடனும் பல நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார். இவர் எடுத்த முடிவால் மஹிந்தவின் கோட்டை அதிர்ந்து போனது. பசில் ராஜபக்ஷ இவரின் முடிவை மாற்ற அல்லது இவரின் மாற்றத்தை தடுக்க பகீரத பிரயத்தனம் செய்தார். ஆகவே இவர் அன்று எடுத்த அரசியல் முடிவானது, அவரது அரசியல் வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் வாழ்வா சாவா என்ற தீர்க்கமானதொரு முடிவாகும்.

இவரின் முடிவுடன் பல பெருன்பான்மை தலைகளை அடுத்தடுத்து மைத்ரி ஆட்சிக்கு ஆதரவளிக்க முன்வந்தனர். அதைத்தொடர்ந்து தபால்மூல வாக்கெடுப்பு நடந்து மறுதினம் ஸ்ரீலங்கா மு.கா.தலைவர் அமைச்சர் ரவுப் ஹகீமும் மைத்ரி ஆட்சிக்கு ஆதரவளிக்க முன்வந்தார். இவரின் முடிவு சரியாக இருந்தாலும் இவர் முடிவெடுத்த நேரம் சரியாக இருக்கவில்லை. இவரின் பாஷையில் சொல்வதானால் கட்சியையும் கட்சித்தலைமையையும் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால் எடுக்கப்பட்ட முடிவாகவே இவரின் முடிவு இருந்தது. இதைத்தான் இன்று ராஜித சேனாரத்ன மிகச் சரியாக கோடிட்டுக் காட்டி கருத்து வெளியிட்டிருந்தார்.

எது எவ்வாறு இருப்பினும் முஸ்லிம்களின் அமோக ஆதரவால் ஆட்சி மாற்றம் நடந்தேறியது. இவர்களின் தேர்தல் விஞ்ஞாபணத்தின் படி நூறு நாள் வேலைத்திட்டத்தில் எந்தளவு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது என்பது பற்றிய கருத்தாடலை தாண்டின் சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம் சமூகம் எந்தளவு சாதகங்களை பெற்றுக்கொண்டது என்பது பற்றி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட இக்காலகட்டத்தில் நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

அரசின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளும் முஸ்லிம் சமூகமும்

குறிப்பிட்ட 1௦௦ நாள் வேலைத்திட்டத்திட்குள், LLRC பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்த நல்லாட்சி அரசாங்கம், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த தமிழ் குடும்பங்களை அரச அனுசரனையுடன் இலங்கைக்கு அழைத்து வந்து மீள் குடியமர்த்தியது. இதற்காக திருகோணமலை மாவட்ட சம்பூர் பகுதியில் முதலீட்டுச் சபையின் கீழுள்ள 818 ஏக்கர் விஸ்தீரனமுள்ள காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கான புதிய நல்லாட்சியின் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அவர்களை மீள்குடியேற்றுவதற்காக மீள்குடியேற்று அமைச்சர் திரு.டி.ஏ. சுவாமிநாதன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் திரு. விக்னேஸ்வரன் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

opinion-1

இதற்குப் புறம்பாக கடற்படையினர் வசமுள்ள 234 ஏக்கர் விஸ்தீரணமுள்ள காணிகளை விடுவித்து இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மாகாண ஆளுநரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக இங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ முகாம் ஒன்றினை அகற்றி, அங்கு குடியிருந்த பூர்வீக குடிகளுக்கு உரிய காணிகளை பெற்றுத்தர முன்வந்திருப்பது கவனிக்கத்தக்க விடயமாகும். இவ்வரசாங்கத்தின் மேற்படி நடவடிக்கைகளை நோக்கும் போது, நல்லாட்சியில், LLRC பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இந்நாட்டின் சமாதானம் மீண்டுள்ளதை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டுவதற்காக அரசாங்கமே முன்னின்று தமிழ் அரசியல் தலைமைகளுடன் கைகோர்த்து செயற்பட்டு வருவதை அவதானிக்கலாம்.

ஆனால் மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாக்கப்பட்டு, அம்மக்கள் தவிக்க விடப்பட்டுள்ளனர். தமது பூர்வீக பூமியில் தான் சட்ட ரீதியாக குடியமர்த்தப்பட்டனர், என்ற தெளிவான ஆதாரங்கள் அத்தாட்சிகள் இருக்கும் போது கூட நல்லாட்சியின் தலைவரான மைத்ரி பால சிறிசேன ஜனாதிபதியவர்கள் இந்த விடயத்தில் இனவாதிகளின் கருத்துக்களுக்கு செவிசாய்த்தவராக பல கருத்துக்களை ஊடகங்களில் வெளியிட்டார்.

opinion-2

கடந்த மஹிந்த ஆட்சியின் போது அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டே “பொது பல சேனா” போன்ற இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள், மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்திலும் தனிமைப்படுத்தப்பட்டு இனவாத சக்திகளின் இலக்காக்கப்பட்டுள்ளார்.

1௦௦ நாள் வேலைத்திட்டமும் முஸ்லிம்களின் கல்விரீதியிலான அடைவுகளும்.

  • தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கான விஷேட அபிவிருத்தித் திட்டம்

நூறு நாள் வேலைத்திட்டத்தில் மலையகத்தின் இருபது தமிழ் பாடசாலைகளை விஷேட திட்டமொன்றின் கீழ் அபிவிருத்திக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில் மத்திய மாகாணத்தின் பத்து பாடசாலைகளும், ஊவா மாகாணத்தில் ஐந்து பாடசாலைகளும், சப்ரகமுவ மாகாணத்தில் ஐந்து பாடசாலைகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.

ஆனால், இத்திட்டத்தில் ஒரு முஸ்லிம் பாடசாலையும் உள்வாங்கப்படவில்லை. இது பற்றி கல்வி ராஜாங்க அமைச்சர் தெரிவிக்கும் போது நூறு நாள் வேலைத்திட்டத்திட்கமைய இதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவற்றில் அநேகமாக ஏற்கனவே ஆயிரம் பாடசாலைகள் திட்டம், மஹிந்தோதய திட்டம், இசுறு பாசல் திட்டம் போன்ற விசேட திட்டங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ள மேற்படி பாடசாலைகள் தொடர்ந்தும் அபிவிருத்தி திட்டங்களுக்கு உள்வாங்கப்படும் போது மேற்சொன்ன எந்தவொரு விஷேட அபிவிருத்தி திட்டத்திற்கும் தெரிவு செய்யப்படாத முஸ்லிம் பாடசாலைகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

  • ஆசிரிய நியமனங்கள்

மலையகத்தின் பதினோரு மாவட்டங்களின் சுமார் 820 மலையக தமிழ் பாடசாலைகளின் 3024 ஆசிரிய வெற்றிடங்களுக்காக கடந்த மாதம் 2014/03/ 09-10-11ம் திகதிகளில் நேர்முகப்பரீட்சைகள் நடத்தப்பட்டு குறிப்பிட்ட நியமனங்களில் ஒரு பகுதி கடந்த மாதம் வழங்கப்பட்டது. இதில் முஸ்லிம் பாடசாலைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருந்தன.

கடந்த 2௦15/௦4/21ந் திகதி இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹகீம், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அமைச்சர் மற்றும் மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவருட்பட தூதுக் குழுவினர் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களை சந்தித்து மேற்படி விடயம் சம்பந்தமாக மலையக முஸ்லிம் பாடசாலைகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ள விடயங்கள் எடுத்துக் காட்டப்பட்டது. மேலும், கொழும்பு மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் பற்றாக் குறைகள் மற்றும் கொலன்னாவ பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் பாடசாலையை நிறுவுவதன் அவசியத்தையும், மற்றும் நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்டுள்ள மௌலவி ஆசிரியர் நியமனம் ஆகிய விடயங்கள் சம்பந்தமாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அமைச்சர் ரவுப் ஹகீம் ஆகியோரால் எடுத்துக் கூறப்பட்டது.

கடந்த வாரம் வரையில் மேற்படி விடயங்களில் தீர்வு கிடைக்காததால் மீண்டும் கல்வியமைச்சரை அவரது அமைச்சு காரியாலயத்தில் சந்திப்பொன்றை நடத்தும் முயற்சியை அமைச்சர் ரிஷாத் பதியுதீனால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலையக ஆசிரிய நியமங்களில் தற்போதைக்கு முஸ்லிம் பாடசாலைகளின் ஆசிரிய வெற்றிடங்கள் சம்பந்தமான தகவல்களை திரட்டும் படி மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாக உரிய ஆவணங்களை சுட்டிக்காட்டி பதிலளித்துள்ளதுடன் ஏனைய விடயங்கள் சம்பந்தமாகவும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆக குறிப்பிட்ட நூறு நாள் வேலைத்திட்டத்தில் முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை எதையும் பெரிதாகப் பெற்றுக் கொள்ளவில்லை. ஆகக் குறைந்தது மைத்ரி ஆட்சியில் வாக்களிக்கப்பட்ட சமூக நல்லிணக்கம்,மத சுதந்திரம் போன்ற விடயங்கள் கூட கேள்விக்குறியாகவே உள்ளன. அதே ஞானசார அதே பாணியில் எந்த வித தடைகளும் இன்றி தமது இனவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்கின்றார்.

ஆகவே பெரும்பான்மைக் கட்சிகள் ஒரு போதும் முஸ்லிம்கள் விடயத்தில் பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. “முஸ்லிம்களின் வாக்குகள் உரிய நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கும், இவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) சேவை செய்தாலும் செய்யாவிட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு யானைக்கு வாக்களிப்பார்கள் என்ற மனோபாவத்தில் இருக்கும் தலைவர்கள் என்பதையே இவர்களின் போக்கு நமக்கு எடுத்துக் காட்டுவதாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையும் இந்த மனோ நிலையிலேயே உள்ளது.

இன்று இந்த அரசாங்கம் சர்வதேசத்தினை கவரும் நோக்கில் வடக்கு தமிழர்களை திருப்திப்படுத்தும், அதே வேளை இந்தியாவை சமாளிக்கும் வகையிலும், தமது பிரதான வாக்கு வங்கியை தக்க வைக்கும் நோக்கிலும் மலையக தமிழ் தலைமைகளை திருப்திப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

ஆகவே இனிவரும் தேர்தல்களில் நமக்கான தனித்துவமான தலைமையொன்றின் பால் நம் முஸ்லிம் சமூகம் அணிதிரள வேண்டியதொரு தேவை தற்போது வெகுவாக உணரப்பட்டுள்ளது. அத்தலைமை தேர்தல் காலத்தில் மட்டுமன்றி தன் சமூக சவால்களுக்கும் முகங்கொடுக்கும் காலமெல்லாம் அதற்காக துணிந்து குரல் கொடுக்கும், தலைமையாகவும், சாணக்கியம், கட்சியை பாதுகாக்க வேண்டும், கட்சி தலைமையை பாதுகாக்க வேண்டும் என்ற பசப்பு வார்த்தைகளால் சந்தர்ப்பங்களை சமாளிக்கும் தலைமையாகவும் இருந்து விடக் கூடாது.