50 – 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று…

நாட்டின் தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சிறிய அளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை, புத்தளத்தில் இருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது.

கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறியளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய கடற்பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக் கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் இருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.