வாஸ் குணவர்தனவின் மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு…

பிரபல வர்த்தகர் முஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உட்பட 06 பேர் தமக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 06ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் இனறு(29) உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு நீதியரசர்களான சிசிர தி ஆப்ரு, பிரியந்த ஜயவர்தன, விஜித மலல்கொட, பிரீதி பத்மன் சுரசேன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் இன்று (29) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த வழக்கு தொடர்பான 85 ஆவணங்களில் 11 ஆவணங்கள் மாத்திரமே கிடைக்கப் பெற்றுள்ளதாக முறைப்பாட்டார்கள் சார்பான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

இதனையடுத்து முறைப்பாட்டாளர்கள் கேட்கும் ஆவணங்களை இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சமர்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வர்த்தகர் முஹமட் சியாம் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் தமக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என்றும் இதன் காரணமாக அந்த குற்றங்களில் இருந்து தம்மை குற்றமற்றவர்களாக விடுதலை செய்ய உத்தரவிடுமாறு முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது புதல்வர் உள்ளிட்ட அறுவரும் தமது மேன்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.