சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், இன்று(18) இலங்கைக்கான கடன் நிதி தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை…

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், இன்று(18) இலங்கைக்கான கடன் நிதி தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை…

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், பல்வேறு மட்டங்களினான பேச்சுவார்த்தைகளை இன்று(18) முன்னெடுக்கவுள்ளதாக நிதியமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

206 மில்லியன் அமெரிக்க டொலருக்கான கடன் வரையறைக் காலத்தைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவதற்கே, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், இலங்கை மத்திய வங்கி, திறைச்சேரி மற்றும் நிதியமைச்சு ஆகியனவற்றின் பிரதிநிதிகளுடன் தங்களுடைய பேச்சுவார்த்தைகள் இன்று ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாயணய நிதியம், இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்த கடன் வசதிகளில், நான்கு வரையறைக்காலங்கள் நிறைவடைந்து விட்டன. அதில், ஐந்தாவது வரையறைக் காலம் கடந்த நவம்பர் மாதம் வழங்கப்படுவதற்கு ஏற்பாடாகியிருந்த போதிலும், ஒக்டோபர் இறுதியில் ஏற்பட்ட அர​சமைப்பு நெருக்கடி காரணமாக, ஐந்தாவது வரையறைக் காலத்தை கைவிடுவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்தது.

இந்நிலையில், அரசமைப்பு நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட்டதன் பின்னர், அந்த கடன் வரையறைக் காலத்தை, சர்வதேச நாணய நிதியத்திடம், அரசாங்கம் கோரியிருந்த நிலையில், அதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கே, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், இரண்டு வார கால விஜயத்தை மேற்கொண்டு கடந்த 15 ஆம் திகதியன்று நாட்டை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(iFA)