7 பேரை பலியாக்கி நீரில் மூழ்கிய சீனக் கப்பல் – 430 பேரை தேடும் பணி தொடர்கிறது

சீனாவில் ஆற்றில் கப்பல் மூழ்கி விபத்துக்குள் சிக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர் என்றும் இன்னும் 430 பேரை காணவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் ஜியாங்சு மாகாணத்தின் தலைநகரான நான்ஜிங்கில் இருந்து, தென்மேற்கு நகரமான சோங்கிங் நோக்கி 4 அடுக்குகளை கொண்ட ‘ஈஸ்டர்ன் ஸ்டார்’ என்ற பயணிகள் கப்பல் 28ஆம் திகதி உள்ளூர் நேரப்படி மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு சென்றது.

இந்த கப்பலில் 405 பயணிகள், பயண நிறுவன ஊழியர்கள் 5 பேர், 46 ஊழியர்கள் என மொத்தம் 456 பேர் பயணம் செய்தனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 9.28 மணிக்கு, 6 ஆயிரத்து 300 கி.மீ. நீளம் கொண்ட, ஆசியாவின் மிக நீளமான நதியான யாங்ட்ஸே ஆற்றில் (ஹூபெய் மாகாணம், ஜியான்லி பிரிவு) சென்று கொண்டிருந்தது.

அப்போது பயங்கர சூறாவளி வீசியது. அந்த சூறாவளியில் சிக்கி நிலை தடுமாறிய கப்பல், ஆற்றில் கவிழ்ந்தது. இது குறித்த தகவல் அறிந்ததும், மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. விபத்துக்குள்ளான கப்பலின் சிதைவுகள், 15 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு மீட்பு பணியில் ராணுவ வீரர்கள், போலீசார், மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் என 4000 ஆயிரம் பேர் ஈடுபட்டு உள்ளனர். நீரில் மூழ்கி தேடும் வீரர்கள், ஆற்றில் இறங்கி பயணிகளை மீட்க தொடங்கி உள்ளனர். முதலில், கப்பலின் கேப்டன், என்ஜினீயர் உள்பட 14 பேர் இதுவரையில் மீட்கப்பட்டு உள்ளனர்.

கப்பலின் சிதைவுகளில் இருந்து 65 வயது பெண்ணும், 21 வயது வாலிபரும் மீட்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

430 பேரை காணவில்லை. அவர்களது கதி என்ன ஆனது என தெரியவில்லை. தொடர்ந்து மழை பெய்து சவாலான வானிலை நிலவியபோதிலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விபத்துக்குள் சிக்கிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட மாலுமி மற்றும் என்ஜினீயரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.