நேரடிக்களத்தில் நின்றதற்கா இத்தனை நெருக்குவாரங்கள்?
(FASTNEWS|COLOMBO) சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையிலான போருக்குள் முஸ்லிம் சமூகத்தின் தலைமை யொன்றை சில தீய சக்திகள்,திட்டமிட்டு மாட்டிவிட்டுள்ளன.நாட்டின் வரலாறு நெடுகிலும் சாந்தி,சமாதானத்தை அடியொற்றி வாழும் எமது சமூகத்தின் தலைமைக்கு எதிராக கடும்போக்கு சக்திகளும், மதத்தீவிரமும் ஏற்படுத்தியுள்ள இந்த ஆபத்திலிருந்து நாம் கரையேறுவது எப்போது?
இந்தக் கடமையைச் செய்யத் தவறினால் எமது எதிர்கால இளம் சமூகம் இஸ்லாத்துக்கு எதிரான சக்திகளால் நிர்க்கதியின் விளிம்பில் நிற்க வேண்டிய கதியே ஏற்படப்போகிறது. முஸ்லிம்களின் பொருளாதாரத்தில் கை வைத்து வந்த இந்தக் கடும்போக்குகளுக்கு, அண்மையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் இஸ்லாமியக் கோட்பாடுகளையும் கருவறுக்கக் கை கொடுத்துள்ளதே இன்று எமக்கு ஏற்பட்டுள்ள வேதனையாகும். விடுதலைப் போரின் தோல்விக்குப் பின்னர் துணிந்தெழுந்த இச்சக்திகள் இரண்டாவது சிறுபான்மைச் சமூகத்தின் இருப்புக்கு குழிபறிக்கும் முயற்சிகளே இப்போது களைகட்டியுள்ளன.
இந்தக் கடும்போக்கர்களின் ஈனத்தனச் செயற்பாடுகளிலிருந்து எமது முஸ்லிம்களைக் காப்பாற்ற நேரடிக்குரல் கொடுத்து, அளுத்கம, பேருவளை ,கின்தோட்ட ,திகன , கண்டி,அம்பாறை தொட்டு இறுதியாக குருநாகல் மாவட்ட அட்டூழியங்களைத் தடுக்க நேரடிக்களம் இறங்கியதைத் தவிர மக்கள் காங்கிரஸ் தலைமை செய்த வேறு தவறுகள் என்ன? முஸ்லிம்களின் கலாசார அடையாளங்களை அழிப்பதற்கு இத்தீயவர்கள் என்றோ திட்டமிட்டுள்ளனர். இதற்கு எதிரான முஸ்லிம் தலைமைகளை அச்சுறுத்திக் குனிய வைக்க எப்போதிருந்தே இவர்கள் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்துள்ளனர்.
துரதிஷ்டவசமாக முஸ்லிம் பெயரை தாங்கிய கயவர்கள் செய்த பயங்கரவாதத்தாக்குதல் இத்தீய சக்திகளை துயிலெழ வைத்துள்ளன.எமது சமூகத்தில் எஞ்சியுள்ள பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்து பூண்டோடு அழிக்க நாம் தயாராகையில் எமது ஒட்டு சமூகத்தையே இக்கடும் போக்குகள் பயங்கரமாகச் சித்தரிப்பதை மக்கள் காங்கிரஸ் தலைமை விடப்போவதில்லை. இதன் பேரில் அப்பாவி முஸ்லிம் தாய்மார்கள்,சகோதரர்கள் வகைதொகையின்றி கைதாவதையும் இந்த தலைமை விரும்பவில்லை.இதற்கு நியாயம் கோரியே அவர் குரல் கொடுத்துவருகிறார்.
பள்ளிவாசல்கள், மத்ரஸாக்களில் கண்ணியத்துடன் நடந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறார். நேர்மையுள்ள எந்த ஹிருதயங்களும் இதில் தவறுகாண முடியாதே எனது சமூகமே.
இதை எதிர்த்துப் பேசினால் முஸ்லிம்கள் அனைவரும் வந்த இடத்திற்குத் திரும்ப வேண்டிவரும் எனச் சொல்லுமளவுக்கு பொதுஜனப் பெரமுன எம்பிக்கள் நச்சுக்கருத்துக்களை வௌியிடுகின்றனர்.
பாரம்பரிய முஸ்லிம்களை எதிர்க்கவில்லை அடிப்படைவாதத்தையே எதிர்ப்பதாகக் கூறும் இந்த இரட்டை நாக்குக் காரர்கள்தானே, எம்மில் ஒருசிலர் செய்த நாசகாரச் செயலுக்காக எமது புனித மார்க்கமான இஸ்லாத்தைப் பயங்கரவாதத்துடன் ஒப்பிடுகின்றனர். இவர்கள் நன்கு திட்டமிட்டே மக்கள் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர்.
முப்பது வருடமாக நாட்டில் இடம்பெற்ற பிரிவினைவாத யுத்தத்துக்கு கிஞ்சித்தும் இடமளிக்காது, தேசப்பற்று, சமூக ஒற்றுமைக்கு வலியுறுத்திய எமது சமூகத்தின் மீதும் தலைமை மீதுமா இவர்கள் நம்பிக்கையில்லை என்கின்றனர். இவர்களுக்கு நம்பிக்கையில்லாது போனால் எமது சமூகம் எங்கே செல்வது என்பதை உங்களில் எவரேனும் சிந்தித்ததுண்டா சகோதரர்களே!
எனவே இத் தலைமையைக் காப்பாற்றி நமது இருப்பையும் கலாசார அடையாளத்தையும் காப்பாற்ற நாமும் எமது பகைகளை மறந்து ஒன்றாகத் துயிலெழுவதே கடும்போக்கை மௌனிக்க வைக்கும்…
இல்லாவிட்டால் இனியுள்ள வரலாறுகளில் நிர்க்கதியின் விளிம்பில் எமது சமூகம் நிற்க வேண்டி வரும்..
சுஐப்.எம்.காசிம்