
ஜனாதிபதி தலைமையில் உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்ச்சி
(FASTNEWS|COLOMBO) – உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்ச்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(06) முற்பகல் 10 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இம்முறை சுற்றாடல் முகாமைத்துவத்தின் ஊடாக ‘வளி மாசடைதலை குறைத்தல்’ என்ற தொனிப் பொருளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியுள்ளன. எதிர்வரும் 30ஆம் திகதி வரை சுற்றாடல் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தேசிய வைபவத்துடன் இணைந்ததாக பத்தரமுல்ல மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் வளாகத்திலும், கண்டி பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலும் வளியின் தரத்தை பரிசோதிக்கக்கூடிய நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படும்.
வளியின் தரத்தை பரிசோதிக்கும் நடைமுறை சார்ந்த கையேடும், இதுகுறித்த கட்டுரைகள் அடங்கிய சஞ்சிகையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.