
மரத் தளபாட உற்பத்தித் துறையை நவீனமயப்படுத்துவதாக பிரதமர் உறுதி
(FASTNEWS | COLOMBO) – அரசாங்கம் உயர்ந்தபட்ச ஆதரவை மரத் தளபாட உற்பத்தி தொழில் துறையை நவீனமயப்படுத்தி அபிவிருத்தி செய்யும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த மர ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் அலரிமாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். இதற்குத் தேவையான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தப்படுமெனவும் குறிப்பிட்டார்.
குறித்த துறையை நவீனமயப்படுத்தும் போது பல பிரச்சினைகள் ஏற்படலாம். நிதிப்பிரச்சினை, சந்தைப்படுத்தல் பிரச்சினை, தொழில்நுட்பத்தை பெற்றுக் கொள்வதில் உள்ள சிக்கல் என்பன இவற்றில் அடங்கும். மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு இணைவாக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஏ.ரி.ஐ.நிறுவனத்தின் ஊடாக பாரம்பரிய மரத்தளபாட உற்பத்தித் துறையை நவீனமயப்படுத்த முடியும்.
இந்தத் தொழில்துறை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தைத் திருத்தங்களுடன் வெளியிட எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்தார். இந்தத் தொழில்துறை தொடர்பில் கண்டறிந்து அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காக இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தலைமையில் ஒரு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைக் கடனை மரத் தளபாட உற்பத்தித் துறைக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் குறிப்பிட்டார்