அதிகாரச்சமரின் ஆடுகளங்கள்
(FASTNEWS|COLOMBO) – அரசியல் கட்சிகளின் நகர்வுகள் தேர்தல்காலத்தை கண்களுக்கு காட்சிப்படுத்துகிறது. மூன்று தேர்தல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ள, இன்றைய சூழலில் ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன தவிர வேறு கட்சிகள் எதுவும் எல்லாத் தேர்தல்களுக்கும் தயாரில்லை.
வௌ்ளோட்டத்துக்கும் வெற்றிவாய்ப்புக்கும் பொருத்தமான தேர்தலை எதிர்நோக்கவே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி என்பன விரும்புகின்றன. உள்ளூராட்சித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு கிடைத்த வெற்றி, ஏனைய கட்சிகளின் இமேஜில் பெரும் சரிவை ஏற்படுத்தினாலும் அந்தச் சரிவை நிமிர்த்திவிட்டோமா? இல்லையா? என்பதை அளவிடப் பொருத்தமான தேர்தல் மாகாண சபை, அல்லது பொதுத் தேர்தல்தான். இன்னும் சில காரணங்களும் இந்தத் தேர்தல்களில் இக்கட்சிகளுக்கு விருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவதில் நீடிக்கும் சிக்கல்கள், கடைசியில் அவிழ்க்கப்படவுள்ள ராஜபக்ஷக்களின் ராஜதந்திரம், சிறுபான்மைக் கட்சிகளை அரவணைப்பதில் இப்போதைக்கு இக்கட்சிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், குறிப்பாக முஸ்லிம் தலைமைகளின் மன நிலைகளைப் புரிவதில் ஐக்கிய தேசிய கட்சியும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் தூரமாகியுள்ளமை, படமெடுத்தாடும் பேராண்மைவாதத்தைக் கட்டுப் படுத்தத் தவறியமை அல்லது கட்டுப்படுத்த முடியாதமை போன்ற காரணங்களும் இவற்றிலுள்ளன. சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகளை எதிர்பாராது பௌத்த தேசியம், தேசப்பற்று, யுத்த வெற்றிகளை நம்பியுள்ள பொதுஜனப் பெரமுனவுக்கு இவை ஒரு பொருட்டில்லை.
இதனால் எந்தத் தேர்தலையும் இக்கட்சி பெரிதாகப் பொருட்படுத்தவுமில்லை. எனினும் உள்ளூராட்சித் தேர்தல் வெற்றியின் விவேகமும், வீச்சும், வியூகமும் இம்முறையும் கை கூடுமா? என்பதை இவர்கள் பொறுத்திருந்தே பார்க்கநேரிடும். ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பதல்ல பொது ஜன பெரமுனவின் பிரச்சினை, மீளவும் அரியணையில் ராஜபக்ஷக்களா? இந்த ஆதங்கமே இங்குள்ள கூட்டணிக் கட்சிகளின் வயிற்றைக் குமட்டுகின்றன. எனினும் மஹிந்தவின் முகத்தைக் காட்டியே, இக்கட்சி வெற்றிக்கு அல்லது வெற்றி இலக்கின் எல்லைக்காவது வர முடியும். இந்த எதிர்வுகூறலும் எதிர்பார்ப்புமே மஹிந்தவை ஓகஸ்ட் 17 இல் ஶ்ரீலங்கா பொது ஜனப் பெரமுனவின் தலைவராக்குகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரைத் தெரிவு செய்யும் விடயத்தில் மிகக் கவனமாகக் காய் நகர்த்தும் ராஜபக்ஷ 19 ஆவது திருத்தத்தில் பிரதமருக்குள்ள அதிகாரப்பிடிகளையும் ஆள அலசாமலில்லை. எதிர்வரும் காலங்களில், தான் அமரவுள்ள பிரதமர் ஆசனத்தின் ஆயுள், அதற்குப் பின்னர் தனது புதல்வரை நாட்டின் அதியுச்ச ஆசனத்தில் அமர்த்தும் இவரின் ஆசைகள் அனைத்தும் வேட்பாளர் தெரிவின்போது ராஜபக்ஷவின் மூளைக்குள் நிச்சயம் ஆதிக்கம் செலுத்தும்.
இந்நிலைமைகள் மன்னராட்சியா, சக்கரவத்தி அரசா என்ற அச்சத்தை ஏற்படுத்தலாம். இந்தப் பிரச்சாரத்தையே ஐக்கிய தேசிய கட்சி உட்பட ஏனைய கட்சிகள் முதன்மைப்படுத்தும். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவர் பதவி துறந்தால் அல்லது அப்பதவி வெற்றிடமானால் பிரதமரே, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார். ஜனாதிபதி பிரேமதாசவின் மறைவுக்குப் பின்னர் டி.பி விஜயதுங்க ஜனாதிபதியானமை இதை எமக்கு ஞாபகமூட்டுகிறது. எனவே ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் ஆட்சியில் பிரதமராக மட்டுமே மஹிந்த பதவியில் இருப்பார் என்பதையும் எதிர்பார்க்க முடியாதுள்ளது.
மறுபுறத்தில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்த ஏற்பாட்டின் பிரகாரம் ஜனாதிபதியின் இரண்டாம் பதவிக்காலம் இன்னும் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. முதுகெலும்பில்லாத இந்தப் பதவிக்கு ஏன் போகவேண்டும் என்று மஹிந்த மட்டுமல்ல ஐக்கிய தேசிய கட்சி பிரேரிக்க ஆலோசிக்கும் சஜித் பிரேமதாசவும் இதைப்பற்றி சிந்தித்தால் ஐக்கிய தேசிய கட்சிக்குள் இன்னும் வெடிப்புக்கள் அதிகரிக்கும். வௌி நாடுகளில் நன்கு பரிச்சயம் இல்லாத, கட்சிக்குள் பலர் விரும்பாத சஜித்பிரேமதாசவை ஜனாதிபதிக் களத்தில் இறக்குவது,கட்சியின் வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும் என்போர், தேர்தலில் வௌிநாடுகளின் ஆதரவுகளும் தேவை என்பதைச் சிந்திக்கவில்லை. 2015 இல் ராஜபக்ஷ யுகத்தை வீட்டுக்கு அனுப்புவதில் வௌிநாடுகளின் கண்காணிப்பு, தலையீடு, உதவி, அழுத்தங்களும் பங்களித்ததை மறக்க முடியாது. தோல்வியுற்று தங்காலைக்குச் செல்லப் புறப்பட்ட மஹிந்தவும் இதை வௌிப்படையாகவே கூறியிருந்தார். தமிழீழ வாக்குகளும் புலம்பெயர் தமிழ் அமைப்பின் செல்வாக்கிலுள்ள வௌிநாடுகளுமே தன்னைத் தோற்கடித்ததாக, அலரிமாளிகையை விட்டு அழுதவாறு மஹிந்த சென்றமை தெற்குக்கு இன்னும் நினைவிலுள்ளன.
எனவே ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்கு வௌிநாட்டுத் தோழர்களும் அவசியமாயுள்ளனர். பொது வேட்பாளரை நிறுத்தி அனுபவித்த வேதனையும் படிப்பினையும் சுற்றிச்சுற்றி கட்சிக்குள்ளே வேட்பாளரைத் தேடவைத்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் களமிறங்கினால், கள நிலவரம் எப்படியிருக்கும்?. தனது மாமன் அறிமுகப்படுத்திய நிறைவேற்று அதிகாரத்தின் எச்சத்தையாவது கடைசிக் காலத்தில், அனுபவிப்பதில்லையா? என்ற ஏக்கம் ரணிலை விட்டாலும் ரணிலின் சகாக்களை விட்டபாடில்லை. அடிக்கடி அவரது காதில் இந்த ஆசையை ஊதும் இவர்கள் “கடைசி முயற்சியைச் செய்துபாருங்கள்” என்கின்றனர்.
என்னவானாலும் இரண்டு அணிகளுக்கு மேல் களமிறங்குவது ஐக்கிய தேசிய கட்சிக்கே வெற்றியைத் தட்டிக் கொடுக்கும். இதையுணர்ந்ததால்தான் தோற்றுப் போகும் பேச்சு வார்த்தைகளுக்கு மத்தியில் பொதுஜனப் பெரமுனவும் சுதந்திரக் கட்சியும் அடிக்கடி சந்திப்புக்களை நடத்துகின்றன. இந்தக் கட்டத்தில் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் தலைமைகளுக்கு,மிக முக்கியமான பணிகள் காத்திருக்கின்றன. ராமன் ஆண்டால் என்ன, ராவணன் அரியணை ஏறினால் என்னவென்ற மன நிலையில் தமது மக்கள் இருப்பதற்கு இத்தலைமைகள் இடமளிக்க முடியாது. 2005 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்களுக்கு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் ஐ.தே.க வேட்பாளர் வென்றிருப்பார். அங்குள்ள ஆறு இலட்சம் வாக்குகளில் குறைந்தது ஒரு இலட்சம் விழுந்திருந்தால் ராஜபக்ஷ யுகம் நாட்டில் அறிமுகமாகியிருக்காது. எனவே வாக்களிப்பில் ஆர்வமூட்டும் செயற்பாடுகளே பேரம்பேசலைப் பலப்படுத்தும். ரணிலின் அரசாங்கம் எதைச் செய்து எம்மைக் காப்பாற்றியது, மைத்திரி வழங்கிய வாக்குறுதிகளில் எவை நிறைவேற்றப்பட்டன.
மஹிந்தவை ஆட்சியில் அமர்த்தி அனுபவித்தாயிற்று. இதற்கு மேல் யாரை நம்புவது? என்ற ஏக்கப் பெருமூச்சுக்களும் முஸ்லிம்கள் வாழும் கிராமங்களின் மூலை,முடுக்குகளில் உள்ளிழுக்கப்படுகிறது. வாக்களிப்பதில் சிறுபான்மையினர் அக்கறையின்றியிருப்பது தென்னிலங்கை அரசியலின் தான்தோன்றித்தன அரசியலுக்கு வடிகானாய் அமைந்து விடும். இந்த ஆபத்துக்களை எடுத்துச் சொல்லியே, இத் தலைமைகள் தேர்தலுக்குத் தயாராக நேரிடும். இதற்கிடையில் கண்டியில் ஏழாம் திகதி நடைபெறவுள்ள பொதுபலசேனா மாநாடு பலருக்கு அச்சத்தையும் முஸ்லிம்களுக்கு சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆகக் குறைந்தது இதையாவது கட்டுப் படுத்துவதற்கு எந்தக்கட்சி, நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதே இவர்களின் எதிர்பார்ப்பு.
19 ஆவது திருத்தத்தின் முழுமை சர்வஜன வாக்கெடுப்பிலே உள்ளது. இது வரை இது நடாத்தப் படவில்லை. சட்டத்தின் இந்த ஓட்டைக்குள் நுழைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2020 ஓகஸ்ட் வரை ஐந்து வருடத்தை பூர்த்தி செய்யவும் முயற்சிக்கலாம். அதாவது அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நிறைவேறிய 2015 ஓகஸ்டிலிருந்து ஐந்து வருடம் என்பதே அவரது கணக்கு. இதுவும் நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு இரும்புப்பிடிதான்.
– சுஐப் எம் காசிம்