சிங்கள தலைமைகளின் யுக்திகளில் பங்காளிக் கட்சிகளின் பொறுமைகள்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய அணிகளைத் தெரிவு செய்வதில் தடுமாறித் தௌிந்த சிறுபான்மைத் தலைமைகள், தாம் ஆதரிக்கும் வேட்பாளரை வெல்ல வைக்க கடைப்பிடிக்கவுள்ள யுக்திகள் எவை? இக்கட்சிகளின் தலைமைகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் என்ன? தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளதால், சிறுபான்மை தலைமைகளின் வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்படுமா?
இக்கேள்விகளின் கண்ணோட்டங்களூடாகவே தேர்தல் களத்திலும் சுழியோட வேண்டியுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் அதிக பங்களிப்பு,அழுத்தங்களைச் செலுத்திய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமது சமூகம் சார்பாக எந்த நிபந்தனைகளும் முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள், ஶ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிலுள்ள பங்காளிக் கட்சிகளுக்கும் பொருந்தும்.
சமூக அபிலாஷைகளுக்கு முன்னுரிமை வழங்காமல் எழுமாந்தமாக வேட்பாளர்களை ஆதரிக்கும் நிலைமை சிறுபான்மைத் தலைமைகளுக்கு ஏற்பட்டதேன்.? இரு தரப்பிலும் இந்தியப் பிரதமர் மோடியின் தனிப் பெரும்பான்மை வெற்றியே எதிர்பார்க்கப்படுவதால், சிறுபான்மைச் சமூகங்களின் நிபந்தனைகள் பொருட்டாகப் போவதில்லையென்றா? தனித்துவ தலைமைகள் மௌனித்துள்ளன. அல்லது பௌத்த, சிங்கள வாக்குகளை தென்னிலங்கையில் அதிகளவு ஈர்க்கும் சிங்களத் தலைமைகளின் யுக்திகளுக்கு இரு அணிகளிலுமுள்ள சிறுபான்மைத் தலைமைகள் வழிவிட்டுள்ளனவா?
எமது நாட்டின் சுதந்திர அரசியல் வரலாறு இப்படியொரு சம பலத்திலான ஜனாதிபதித் தேர்தலை கண்டிருக்காது. ராஜபக்ஷக்களின் தென்னிலங்கைத்தளத்தை உடைப்பதில் ஐக்கிய தேசிய முன்னணியும் பிரேமதாஸக்களின் சிறுபான்மைத் தளத்தை தகர்ப்பதில் ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவும் எடுத்துக் கொண்ட யுக்திகளுக்குள் சிறுபான்மைச் சமூகங்கள் மாட்டிக் கொண்டுள்ளதையே அவதானிக்க முடிகிறது
.எனினும் ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள சிறுபான்மைத் தலைமைகளுக்கிடையில் நிலவும் ஒற்றுமை,விட்டுக்கொடுப்பு, இணைந்த செயற்பாடுகளை ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவிலுள்ள தனித்துவ கட்சிகளிடையே காண முடியாதுள்ளமை கவலையே!. மேலும் இங்கு தனித்துவ கட்சிகள் இருப்பதாகவும் அர்த்தம் கொள்ள முடியாது.இந்த அணியிலுள்ள தேசிய காங்கிரஸ்,ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிகளை சிறுபான்மைத் தலைமைகளாக அங்கீகரிக்க முடிந்தாலும் தேசிய காங்கிரஸின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கடந்த தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டதால் மக்கள் அங்கீகாரத்துக்காக மீண்டுமொருமுறை கடுமையாக உழைக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன சார்பில் களமிறங்கியுள்ளதாக ஊகிக்கப்படும் ஹிஸ்புல்லாஹ் தேசிய காங்கிரஸின் இணக்கத்துடன் களமிறங்கியதாகக் கருதக் கடினமாகவுமுள்ளது. ராஜபக்ஷக்களின் முகாம்களுக்குள் முஸ்லிம் தனித்துவ தலைமை,தனிப்பட்ட நபர்களுக்கு இடையில் இடைவௌியுள்ளதை இது உணர்த்துகிறது. இந்த அணியினரின் எதிர்கால வளர்ச்சிக்கு கோட்டாவின் வெற்றி தேவைப் படுவதால்,பகைகளைப் பொருட்படுத்தாது வெவ்வேறு கோணங்கள்,தளங்களில் நேரடி,மறைமுக முகவர்களாக இவர்கள் களமிறங்கியுள்ளனர்.
ஐக்கிய தேசிய முன்னணியைப் பொறுத்தவரை போட்டி,பகைகளின்றி சிறுபான்மைத் தலைமைகள் ஆட்டத்தில் இறங்கியுள்ளன. இத்தலைமைகளின் பாராளுமன்ற ஆயுள்களும் ஐக்கிய தேசிய முன்னணியின் வெற்றி,தோல்விகளில் இல்லை.சஜித் பிரேமதாஸவின் தோல்வி இக் கட்சிகளின் பாராளுமன்றப் பலத்தில் அதிர்வை ஏற்படுத்தினாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது.இதுவல்ல விடயம். வெல்லப் போகும் சிங்களக் கட்சி, இந்தியப் பிரதமர் மோடியைப் போன்று தனிப்பெரும்பான்மையுடன் வென்றால் (வாக்கு வித்தியாசங்கள்) கடும் போக்கர்களின் அழுத்தங்களால் தோழமைக் கட்சிகள் தூக்கியெறியப்படலாம்.
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் எம்பிக்கள் ஒருமித்து அமைச்சுப் பதவிகளைத் துறந்ததால் விழித்துக் கொண்ட தென்னிலங்கைச் சமூகம் சிறுபான்மையினரின் பேரம்பேசும் பலங்கள் பௌத்தர்களின் தாயக அபிலாஷைகளுக்கு ஆபத்தென் பதை உணர்ந்துள்ளன. தென்னிலங்கைச் சமூகத்தின் அச்சத்தை போக்கவே சில முஸ்லிம் தலைமைகளின் ஆதரவை ஐக்கிய தேசிய முன்னணி பெரிது படுத்தாதுள்ளது
சிறுபான்மைத் தளங்களில் (வடக்கு,கிழக்கு) தனக்கு வாக்குகளில்லை என ராஜபக்ஷ அணி தெற்கில் அனுதாபம் தேடுவதும் இந்த யுக்திகளில்தான். விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த யுத்தத்தில் அங்கவீனர்களாக்கப்பட்ட படையினரின் மனைவியர் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்கள் தென்னிலங்கையில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தின.
“முஸ்லிம்களையும் தமிழர்களையும் பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றவே எமது சிங்கள இளைஞர்கள் அங்கவீனமாக்கப்பட்டனர். இப்போது இச்சமூகங்கள் எம்மோடு இல்லை.எண்பது வீதமுள்ள சிங்கள மக்களிடம் இதை எடுத்துச் சொல்லி பௌத்தர்களின் அமோக ஆதரவைப் பெற்றுத்தாருங்கள் படையினரின் சகல பிரச்சினைகளும் தனிப்பெரும் பான்மைப் பலத்துடன் தீர்க்கப்படும்” என்கின்றனர் மஹிந்தவும் கோட்டாவும்.இதை முறியடிக்க சிறுபான்மைக் கட்சிகளின் எந்த நிபந்தனைகளையும் ஏற்கவில்லை என்கின்றார் சஜித்.எண்பது வீத வாக்காளர்களுள்ள தெற்குத் தளங்களைத் திருப்திப்படுத்தும் இந்த யுக்திகளுக்குள் எமது நிபந்தனைகள் இடைஞ்சலாகும் என்பதால்தான் இரு தரப்பு அணிகளிலுமுள்ள சிறுபான்மைச் சமூகங்களின் தலைமைகள் ஒப்பந்தங்கள் செய்வதிலிருந்து விலகியுள்ளன. இம்முறை சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஐந்துபேர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதும் பெரும்பான்மைச் சமூகத்தின் சந்தேகங்கள், ஐயங்களிலிருந்து ஒளிந்து கொள்ளும் யுக்திகளாகவே உள்ளன….
– சுஐப் எம் காசிம்