ஆழ்துளை கிணறுகளும் பலியாகும் பிஞ்சுகளும்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒவ்வொரு முறையும் ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை ஒன்று விழும்போதும் அதுபற்றிய செய்தி வைரலாக பரவுவதும், குழந்தைக்காக இரக்கப்படுவதும், பிரார்த்தனை செய்வதும், அரசிடமிருந்து மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூடவேண்டும் என்ற அரச உத்தரவுகள் மேலெழுவதும் இதற்கு குறையே இருக்காது என்றே கூற வேண்டும்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை சுஜித் வில்சனை மீட்பதற்கு இதுவரை எடுத்த முயற்சிகள் வெற்றிகரமாக அமையவில்லை என்பது கசப்பான உண்மை.
ஆம், திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. இவர் மனைவி கலாமேரி. குறித்த தம்பதிகளின் 02வது மகன் 02 வயதினைக் கொண்ட சுர்ஜித் வில்சன் கடந்த 26ம் திகதி வெள்ளியன்று மாலை 5.30 சுஜித் வில்சனின் தந்தையால் சுமார் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்து கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டான்.
ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சுர்ஜித் மற்றும் அவனது குடும்பம்
தொடக்கத்தில் சுமார் 25 ஆழத்தில் சிக்கி கொண்ட சுர்ஜிதை மீட்க முதலில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்குசென்று மீட்பு பணியை தொடங்கினர். ஆனால் சிக்கல் அதிகரிக்கவே இது போன்ற சம்பவங்களில் மீட்பு பணியில் ஈடுபடும் மதுரை மணிகண்டன் என்பவர், தான் கண்டுபிடித்த கருவிகளுடன் வந்து மீட்பு பணியை தொடங்கினார்.
சுமார் 25 ஆழத்தில் சிக்கி கொண்ட சுர்ஜித்
பின்னர் அணி அணியாக வந்து தங்கள் பங்குக்கு முயற்சி செய்கிறார்கள். எனினும் (இந்தக் கட்டுரையினை எழுதும் வரை) சிறுவன் சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து சுமார் 65 மணி நேரத்துக்கு மேலாகியும் குழந்தையை நெருங்க முடியாத நிலையில் மீட்புக்குழு உள்ளது என்பது தான் தற்போதைய நிலை என்றே கூற வேண்டும்.
குழந்தை மீட்கப்பட்டு விடுவான் என்று எல்லோரும் நம்பிக்கையுடன் இருந்த போதிலும், மீட்பு பணியின் போது குழந்தை மேலும் ஆழத்துக்கு சென்று விட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து, நிலைமை மேலும் சிக்கலானது. அதுவரை குழந்தை உணர்வுடன்தான் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் 60 அடி ஆழத்தில் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் இருந்து ஒரு மீட்புக் குழுவினர் வந்தனர். அவர்களாலும் குழந்தையை மீட்க முடியவில்லை. இதையடுத்து, தேசிய பேரிடம் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
இதனிடையே குழந்தை சுர்ஜித் 88 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டான். மேலும், குழந்தை ஆழத்திற்கு செல்வதற்குள் பக்கவாட்டில் துளையிட்டு குழந்தையை மீட்க ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. அப்பகுதியில் மண்ணின் தன்மை கடுமையாக இருப்பதால் அந்த ரிக் இயந்திரத்தின் திறன் போதாது என்று ராமநாதபுரத்தில் இருந்து சக்தி வாய்ந்த அதிக திறன் கொண்ட ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு மழையிலும் மீட்பு பணி தொடர்கிறது.
ரிக் இயந்திரத்தின் உதவியுடன் மீட்புப் பணிகள் தொடர்கிறது
தமிழக அரசு நிர்வாகம் குழந்தை சுர்ஜித்தை மீட்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதில் எந்தவொரு விமர்சனமும் இல்லை. உண்மையில் பாராட்டப்பட வேண்டும். ஆனால், இந்நடவடிக்கைகள் எல்லாமே படிப்படியான அடுத்த கட்ட நடவடிக்கைகளாக மட்டுமே உள்ளமை கவலையளிக்கிறது.
சுர்ஜித்தை மீட்பதில் தமிழக அரசு தீவிரம்
கிராமங்களில் பாசனத்திற்கான முன்பு அதிகளவில் கிணறுகள் தோண்டப்பட்டன. ஆனால் தற்போது Borewell இயந்திரங்கள் மூலம் 500 அடி, 600 அடி ஆழத்திற்கு ‘Borewell’ தோண்டப்படுகின்றன. அவற்றில் தண்ணீர் வந்தால் சரி; இல்லையென்றால் அதில் இறக்கியிருந்த குழாய்களை உருவி விட்டு அந்த மரணக் குழியை ஒரு கோணிச்சாக்கு கொண்டு மூடிவிட்டு அடுத்தப் பகுதியில் இயந்திரம் கொண்டு தோண்ட கிளம்பி விடுகிறார்கள்.
தனியார் மட்டுமல்லாமல் அரசும் குடிநீர் தேவைக்காக பல இடங்களில் Borewell எனப்படும் ஆழ்துளைக் கிணறுகளை தோண்டுகிறது. தண்ணீர் வந்தால் குழாய் அமைத்து பயன்பாட்டுக்கு விடுகின்றனர். இல்லையென்றால் மேற்கூறியதைபோல் ஒரு கோணிச்சாக்கு கொண்டு கட்டிவிட்டு தங்களது வேலையைப் பார்த்துக் கொண்டு கிளம்பி விடுகிறார்கள்.
தண்ணீர் வரவில்லை என்றால் விரக்தியாலும், அலட்சியத்தாலும் கைவிடப்படும் ஆழ்துளைக் கிணறு, குழந்தைகளின் உயிருக்கு எமனாக அமைந்துவிடும் என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் செயல்படுவதன் விளைவாகவே இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
சில இடங்களில் ஆழ்துளைக் கிணறுகளை மண் கொண்டு மூடிவிட்டோம் என்று எளிதாக கடந்துபோய்விடுவது நிகழ்கிறது. சுர்ஜித் சிக்கியுள்ள இந்த ஆழ்துளைக் கிணறும் தண்ணீர் வரவில்லை என்று தெரிந்ததும், குழாய்களை உறுவிவிட்டு, மண் கொண்டு மூடப்பட்டதுதான். ஆனால் நாளடைவில் மழைநீர் உள்ளே போகப்போக அந்த மண் கீழ் நோக்கி இறங்கி பெரும் துளை விழுகிறது. இது தொடர்பில் அரசு கவனம் செலுத்துவதில்லை என்றே கூற வேண்டும்.
சிறுவன் சுர்ஜித்திற்காக தமிழகம் மட்டுமல்லாது, உலக வாழ் மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றமையையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
சுஜிர்த்தின் மழலை ஆட்டம்
சுர்ஜித் போன்ற பச்சிளம் குழந்தைகள் தெரியாமல் தவறி விழுந்ததாக கூறலாம். ஆனால் உண்மையில் நம் அலட்சியத்தால் அவர்களை தள்ளிவிட்டு மேலே இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
–ஆர்.ரிஷ்மா-