8 வயது சிறுமி துஷ்பிரயோகத்தின் பின் கொலை : பழைய செய்தி என பொலிஸார் தெரிவிப்பு

காலி, அக்மீமன பிரதேசத்தில் எட்டு வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை முதல் சில பிராந்திய இணையங்களிலும், சமூக ஊடகங்களிலும் தெமுனி பூஜானி என்ற சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் டெய்லி சிலோன் செய்திப் பிரிவு காலி, அக்மீமன பொலிஸ் நிலையத்தை தொடர்புகொண்டு வினவியபோதே, குறித்த செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை எனவும், கடந்த தினங்களில் இதுபோன்ற எந்தவிட அசம்பாவிதங்களும் அங்கு இடம்பெறவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை இந்த செய்தி தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தை எமது செய்திப் பிரிவு தொடர்புகொண்டு வினவியபோது, குறித்த சம்பவம் கடந்த வருடம் நடைபெற்றது என உறுதி செய்தனர்.

கொட்டதெனியாவ ஐந்து வயதுடைய சிறுமியின் படுகொலையை நினைவு படுத்தி, குறித்த பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.