‘ஒன்லைன்’ மூலம் புலமைப்பரிசில் தொகை

‘ஒன்லைன்’ மூலம் புலமைப்பரிசில் தொகை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில், சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிதி ´ஒன்லைன்´ மூலமாகச் செலுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனஞ் செலுத்தியுள்ளது.

இதற்கமைவாக, அடுத்த மாதம் தொடக்கம் அரசாங்கத்தின் அனைத்துப் பாடசாலைகளுக்கும், பிரிவெனாக்களுக்கும், தனியார் மற்றும் அரச நிதியைப் பெற்றுக் கொள்ளும் பாடசாலைகளுக்கும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான இந்நிதி இம்முறையின் கீழ் வழங்கப்படவுள்ளது.

புலமைப்பரிசில் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு இதுவரையில், மாதாந்தம் வவுச்சர் மூலம் விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. இதில் நிலவிய பிரச்சினைகள் மற்றும் தாமதங்களைக் கருத்திற்கொண்டு, இந்த நடைமுறை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான நிதியைச் செலுத்துவதை, செயற்றிறன்மிக்கதாக முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தற்போது நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக, இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த நிதியைப் பெற்றுக் கொள்ள தகுதியான மாணவர்களின் தகவல்கள் அடங்கிய கட்டமைப்பொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, ஒவ்வொரு மாதமும் 10ம் திகதி இம் மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகளில் புதிய முறை மூலம் வைப்பீடுகள் மேற்கொள்ளப்படும்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஒவ்வொரு வருடமும் 3 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களுள் குறைந்த வருமானத்தைக் கொண்ட 20 ஆயிரம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது. மாதாந்தம் 750 ரூபா புலமைப்பரிசில் நிதியாக வழங்கப்படுகிறது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக 90 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)