
நெல்லினைக் கொள்வனவு செய்வது சாத்தியமற்றது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முல்லைத்தீவு மாவட்டத்தில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயிகளிடம் இருந்து நெல்லினைக் கொள்வனவு செய்வது சாத்தியமற்றதாக மாறி உள்ளது.
கடந்த இருபது நாள்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியார் வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் நெல்லைக் கொள்வனவு செய்வதாகத் தெரிவித்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் அவசரக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வங்கிகளிடம் இருந்து கடன்களைப் பெற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் நெல் கொள்வனவில் ஈடுபடுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
மாவட்டச் செயலகத்தின் ஒழுங்குப் படுத்தலில் நெல் சந்தைப்படுத்தும் சபை நெல் கொள்வனவில் ஈடுபட்டுள்ள போதிலும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களினால் நெல் கொள்வனவில் ஈடுபட முடியவில்லை.
காரணம் வங்கிகளிடம் இருந்து கடன் பெற முடியாத நிலை. ஏற்கெனவே பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் பல வங்கிகளிடம் இருந்து பெற்ற கடன்களை முழுமையாகச் செலுத்தி முடிக்காமை எனப் பலக் காரணங்களினால் வங்கிகளிடம் இருந்து கடன்களைப் பெற முடியாத நிலையில் இவ்வாண்டு காலபோக நெல்லை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் நிதி நிலைமைகள் தொடர்பான விபரங்களை தற்போது திரட்டி வருகின்றது. வரும் சிறுபோகத்தில் தான் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயிகளிடம் இருந்து நெல்லைக் கொள்வனவு செய்யக் கூடிய நிலைமை உருவாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது