“புத்தளத்து வாக்காளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருக்கும் வடக்கு முஸ்லிம்கள், இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப்பெற பங்களிக்க வேண்டும்” – ரிஷாட்
(ஃபாஸ்ட் நியூஸ் | புத்தளம் ) – புத்தளம் மாவட்ட சிறுபான்மை சமூகம் இழந்து தவிக்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை, மீளப்பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளையும் முயற்சிகளையும் இதயசுத்தியுடன் மக்கள் காங்கிரஸ் மேற்கொண்டு வருகின்றது என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்து வாழும் வடக்கு முஸ்லிம்கள், இந்தப் பிரதிநிதித்துவத்தை அடைவதற்கு தம்மாலான முழுப்பங்களிப்பையும் நல்க வேண்டுமெனவும் அவர் மேலும் கூறினார்.
புத்தளத்தில் 90 ஏக்கர், 25 ஏக்கர் மற்றும் ஸலாமத்புரம் ஆகியவற்றில் வாழும் வடக்கு முஸ்லிம்களை நேற்று மாலை (22) சந்தித்துக் கலந்துரையாடியபோதே மக்கள் காங்கிரஸ் தலைவரும் பா.உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.
“30 வருடங்களாக புத்தளத்து சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் வெற்றிடமாகக் கிடக்கின்றது. வடபுல அகதி மக்களை வாழவைத்த இந்த மண்ணின் மாந்தர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலேயே, கடந்த பொதுத் தேர்தலில் எமது கட்சிக்குக் கிடைத்த தேசியப்பட்டியலை நவவி ஹாஜியாருக்கு வழங்கினோம். எனினும், புத்தளத்து மக்கள் தொடர்ந்தும் தேசியப்பட்டியலின் மூலம், தமது பாராளுமன்றத் தாகத்தை தீர்த்துக்கொண்டிருக்க முடியாது. சொந்த வாக்குகளினால், ஒற்றுமையின் மூலம் தமது பிரதிநிதித்துவத்தை அடைய வேண்டும். எனவேதான், நாமும் அந்த ஆக்கபூர்வமான முயற்சிகளில் இறங்கியுள்ளோம்.
வன்னி மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகளினாலும் உழைப்பினாலும் தொடங்கப்பட்ட எமது அரசியல் பயணம், நாடு முழுக்க வியாபித்தமைக்கு நீங்கள் தொடர்ந்து வழங்கும் ஆதரவும் பிரார்த்தனைகளுமே பிரதான காரணம்.
நமது கட்சியின் வளர்ச்சியில் நீங்கள் பிரதான பங்காளிகளாக இருப்பதோடு மாத்திரமின்றி, அதற்கு அடித்தளம் போட்டவர்களும் நீங்களே! நாம் முன்வைத்த காலை என்றுமே பின்வைக்காமல் செயற்படுவதனாலேயே வெற்றிகள் கிடைக்கின்றன. எதிரிகளினதும் காழ்ப்புணர்வாளர்களினதும் எண்ணங்கள் தவிடுபொடியாகிக்கொண்டிருப்பதற்கு, நீங்கள் எமக்குத் தந்த பலமும் ஒரு காரணமாகும். எதிர்வரும் காலங்களிலும் பொய்யர்களையும் பித்தலாட்டக்காரர்களையும் நீங்கள் இனங்கண்டு ஒதுக்குவதன் மூலமே, நமது சமுதாயம் தலைநிமிர்ந்து வாழமுடியும்” என்று கூறினார்.
ஊடகப்பிரிவு –