கலந்துரையாடலின் மூலம் பிரச்சினைகளைக் கையாளுதல்: ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

மூன்று தசாப்தத்திற்கும் மேலாக இந்நாட்டில் நிலவிய கோரமான யுத்தம் முற்றுப் பெற்று அனைத்து மக்களும் சமாதானக் காற்றை நுகர்ந்து கொண்டிருக்கும் நல்லதொரு சூழ்நிலையில், இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் பல மட்டங்களில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருவதனை நாம் காண்கிறோம். பல்வேறு குற்றச்சாட்டுக்களும் சிலபோது புரளிகளும் கிளப்பப்படுகின்றன. சில ஊடகங்கள் (Media) எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் வேலையைக் கச்சிதமாகச் செய்துவரும் அவலத்தையும் காண்கிறோம்.

இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுகின்ற முன்னெடுப்புகளால் நன்மை அடையப்போவது யாரென்று தெரியவில்லை. ஆனால், எமது நாடும் நாட்டு மக்களும் இதனூடாக நன்மையடையப் போவதில்லை என்பது உண்மை.

சில பிரச்சினைகள், முரண்பாடுகள், சந்தேகங்கள் இல்லாமலில்லை. இவற்றுக்கான தீர்வு என்ன? மிரட்டுவதா, வசைபாடுவதா, கண்டித்து நடப்பதா, துண்டித்து நடப்பதா, அடக்க முற்படுவதா? இவ்வாறான மோதல்கள் ஒருபோதும் பிரச்சினைக்கான முடிவைத் தராது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சாமுவேல் ஹன்டிங்டன் என்ற ஓர் அமெரிக்க ஆய்வாளர் நாகரிகம் மற்றும் மதங்களுக்கிடையில் முரண்பாடும் மோதலும் தொடரப்போகிறது என எச்சரிக்கை விடுத்தார். அதன் மோசமான விளைவுகளை உலகம் இன்று அனுபவிக்கிறது. அச்சந்தர்ப்பத்தில் நாகரிகங்களுக்கும் மதங்களுக்குமிடையில் மோதலில்லை அவற்றுக்கிடையில் கலந்துரையாடல் வலியுறுத்தப்பட வேண்டும் என இஸ்லாமிய உலகம் தீர்வுகளை முன்வைத்தது.

இஸ்லாம் மோதலை எதிர்பார்க்கின்ற மார்க்கமல்ல. கலந்துரையாடல், பேச்சுவார்த்தை ஊடாக எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கலாம் தீர்க்க வேண்டும் என வலியுறுத்துகின்ற மார்க்கம். ரிஸாலத், ஆகிரா முதலான இஸ்லாத்தின் அடிப்படையான நம்பிக்கைகளை நிறுவுவதற்குக்கூட புனித அல்குர்ஆன் கலந்துரையாடல் முறையைக் கையாண்டிருப்பதனைப் பார்க்கிறோம்.

கலந்துரையாடலோடு சம்பந்தப்பட்ட பேசுதல், சொல்லுதல், உரையாடுதல், கதைத்தல் முதலான கருத்துக்களைத் தரும் ‘கௌல்’ என்ற பதத்திலிருந்து தோன்றிய கால, யகூலு, குல், யகூலூன், தகூலூன் போன்ற சொற்கள் அல்குர்ஆனில் சுமார் 1700 தடவைகள் இடம்பெற்றுள்ளன.

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் இடையிலான கலந்துரையாடல், அல்லாஹ்வுக்கும் மலக்குகளுக்குமிடையிலான கலந்துரையாடல், அல்லாஹ்வுக்கும் ஷைத்தானுக்கும் இடையிலான கலந்துரையாடல், துதர்களுக்கும் சமூகங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல், இறைதூதர்களுக்கும் அவர்களுடைய எதிரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல்கள், நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல், நல்லவர்களுக்கிடையிலான கலந்துரையாடல், கெட்டவர்களுக்கிடையிலான கலந்துரையாடல்கள்… என்று அல்குர்ஆன் எல்லோர் மத்தியிலும் முரண்பாடுகளைக் களைவதற்கும் சத்தியத்தைத் நிலைநிறுத்துவதற்கும் உண்மையைப் புரிந்து கொள்வதற்கும் உடன்பாட்டை உருவாக்குவதற்கும் கலந்துரையாடல் என்ற பலம்வாய்ந்த ஆயுதத்தைப் பயன்படுத்தியிருப்பதனைப் பார்க்கின்றோம்.

கலந்துரையாடல்களுக்கூடாக முரண்பாடுகளைக் களையலாம் அல்லது குறைக்கலாம். பல விடயங்களில் உடன்பாடு காணலாம். ஆனால், கலந்துரையாடல்களுக்குரிய ஒழுங்குகள் பேணப்பட வேண்டும்.

கலந்ததுரையாடலுக்குரிய ஒழுங்குகளைப் பேணும்பட்சத்தில் எந்தப் பெரிய விவகாரமாயினும் நல்ல தீர்வுகளைப் பெற முடியும் நல்ல உடன்பாடுகளுக்கு வர முடியும்.

எப்பொழுதும் கலந்துரையாடல் உண்மையை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும். பொய், புரளி, பழிசுமத்தல், அபாண்டம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கலந்துரையாடல் அமைகின்றபொழுது நிச்சயமாக நாம் எதிர்பார்க்கின்ற தெளிவு கிடைக்கப் போவதில்லை.

கலந்துரையாடலின்போது பண்பாடு பேணப்பட வேண்டும். பிர்அவ்னோடு கலந்துரையாடுவதற்காக மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் அவரின் சகோதரர் ஹாரூன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் அனுப்பப்பட்டபோது அல்லாஹ் அவர்களைப் பார்த்து, “நீங்கள் இருவரும் பிர்அவ்னுக்கு அழகான, பண்பான, நளினமான வார்த்தையாடல்கடாக உங்களின் செய்தியை எடுத்துச் சொல்லுங்கள், உங்களது பேச்சிலே நாகரிகம் இருக்க வேண்டும்” (………) எனச் சொன்னான்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அற்புதமான பண்புகளுள் ஒன்று எல்லா விடயங்களிலும் பண்பாடு பேணுவது. அண்ணலார் பேச்சிலும் நடத்தையிலும் அனைத்து விடயங்களிலும் பண்பாடாக நடந்து கொண்டார்கள்.

நபியவர்கள் ஒருபோதும் கெட்ட, தரக்குறைவான வார்த்தைகளைப் பேச மாட்டார்கள். பண்பாடு கெட்ட செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்பதை இஸ்லாமிய வரலாறு பதிந்து வைத்திருக்கிறது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு முஃமினுக்கான வரைவிலக்கணத்தை இப்படிச் சொல்கிறார்கள்:

“முஃமின் என்பவன் சாடுபவன் அல்ல, சபிப்பவன் அல்ல, கெட்ட வார்த்தை பேசுபவனல்ல, கெட்ட செயலில் ஈடுபடுபவன் அல்ல” (சுனன் திர்மிதி)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பார்த்து அல்குர்ஆன் இவ்வாறு சொல்கிறது:

“நபியே! நீங்கள் (மனிதர்களை) நளினமாகவும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உங்கள் இறைவனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றி அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) நீங்கள் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்யுங்கள்” (அந்நஹ்ல்: 125)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தூதுத்துவப் பணி வெற்றி பெற்றதற்குக் காரணம், அவர்களின் வாள்முனையின் வன்மையல்ல அவர்களுடைய பண்பாட்டின் பலம் என்பதை முஸ்லிமல்லாத அறிஞர்களே ஏற்றுக் கொள்கிறார்கள் அதற்கு சாட்சி சொல்கிறார்கள்.

அல்லாஹ்வின் பாதையின் பக்கம் மக்களை அறிவோடு, ஞானத்தோடு, பண்பாடாக, நல்ல உபதேசங்கள் மூலம் அழைக்குமாறும் விவாதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மிகச் சிறந்த, அழகான முறையில் பேச்சுவார்த்தையை, கலந்துரையாடலை, விவாதத்தை அமைத்துக் கொள்ளுமாறும் அல்குர்ஆன் நபியைப் பார்த்துப் பணிக்கிறது.

“நபியே! நீங்கள் (மனிதர்களை) நளினமாகவும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உங்கள் இறைவனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றி அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) நீங்கள் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்யுங்கள்” (அந்நஹ்ல்: 125)

அல்குர்ஆன் கூறும் கலந்துரையாடலுக்கான தர்மங்கள், ஒழுங்குகளில் மற்றோன்றுதான் எதிர்த்தரப்பினருடைய கருத்து சரியாக, பொருத்தமாக, நியாயமாகத் தெரிகின்றபோது துணிச்சலாக அதனை செவிமடுப்பதும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டத்தில் ஏற்றுக் கொள்வதுமாகும்.

இத்தகைய கலந்துரையாடலுக்குரிய தர்மங்களை மீறி உண்மைக்குப் புறம்பாக, சத்தியத்திற்கு மாற்றமாக, பண்பாடுகளை மீறிப் பேசுபவர்களோடு மனித விழுமியங்களை மதிக்காமல் பேசுபவர்களோடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

“நபியே! நீங்கள் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வையே நம்புங்கள். (உங்களுக்கு) பொறுப்பேற்க அல்லாஹ்வே போதுமானவன்.” (அந்நிஸா: 81)

ஸூரதுல் புர்கானின் கடைசிப் பகுதி ரஹ்மானுடைய அடியார்களின் பண்புகளை தெளிவாக கற்றுத் தருகிறது. அறிவீனர்கள், குதர்க்கத்தில் ஈடுபடுபவர்கள் ரஹ்மானுடைய அடியார்களோடு விவாதிக்க வந்தால் அவர்கள் ஷஸலாம்| என்று கூறி பண்பாடாக சென்று விடுவார்கள் என்ற வழிகாட்டலை ஸூரதுல் புர்கான் சொல்லித் தருகிறது.

எனவே, எமது கலந்துரையாடல்கள் அறிவுபூர்வமாக இருக்க வேண்டும் ஆதாரபூர்வமாக அமைய வேண்டும் உணர்ச்சிவசப்பட்டதாக அமையக்கூடாது. உண்மையின் அடிப்படையில், பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாக, முழுக்க முழுக்க மனிதப் பண்புகளைக் கவனத்திற் கொண்டு அவற்றைப் பேணிய நிலையில் எமது கலந்துரையாடல்கள் அமைய வேண்டும். இவ்வாறான ஒழுக்கங்கள் பேணப்படுகின்றபோது கலந்துரையாடல்கள் நிச்சயமாக நல்ல விளைவுகளைத் தரும்.

முரண்பாடுகளைக் களைவதற்கும் உடன்பாடு கண்டு நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் கட்டியெழுப்புவதற்கும் கலந்துரையாடல் இன்றியமையாதது. பெரும் பெரும் பிரச்சினைகளெல்லாம் கலந்துரையாடலின் மூலமாக அற்புதமாக தீர்க்கப்படுவதனை நாம் உலகத்தில் பார்க்கிறோம்.

தீர்வில்லாத பிரச்சினையில்லை முடிவில்லாத எந்த விவகாரமுமில்லை. அதற்குத் தேவை கலந்துரையாடல். ஆனால், வெறும் கலந்துரையாடல் மாத்திரம் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையப் போவதில்லை. அதற்கும் அப்பால் மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக, இலங்கை போன்ற பல்லின சமயத்தவர்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் சமூக நல்லிணக்கம் அத்தியவசியமானது. சமூக நல்லுறவு இன்றி நாடு முன்னேற்றம் காண முடியாது. பயமும் பீதியும் அச்சமும் உள்ள இடத்தில் மேம்பாடு அடைய முடியாது.

எனவே, இலங்கையின் அரசாங்கம், அதிகாரிகள், சமூகத் தலைமைகள், மதத் தலைவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இலங்கையர் என்ற வகையில் எல்லோர் மத்தியிலும் நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதில் கூடிய கரிசனையும் அக்கறையும் காட்ட வேண்டியது சமகாலத்தின் இன்றியமையாத தேவையும் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய அம்சமுமாகும்.

அடுத்ததாக இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள், தமது மூதாதையர்கள் வழிநின்று காலா காலமாக எல்லா சமூகங்களுடன் பொதுவாகவும் பெரும்பான்மை சமூகத்தோடு குறிப்பாகவும் நல்லுறவைப் பேணி நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வந்தார்கள். அந்நிலையை மேலும் பலப்படுத்த வேண்டிய ஒரு கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

எனவே, கலந்துரையாடல், கருத்துப்பரிமாறல், கருத்தரங்குகள், பேச்சுவார்த்தைகள் என்பவற்றால் மாத்திரம் நாம் எதிர்நோக்கியிருக்கும் சில பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் அமையப் போவதில்லை. நடைமுறையில் நல்லுறவை வளர்ப்பதற்கான பணிகளில் நாம் ஈடுபட வேண்டும்.

அந்த வகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கீழ் இயங்குகின்ற ஒருங்கிணைப்புக்கும் ஒத்துழைப்புக்குமான கவுன்சில் இந்நாட்டில் ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்காகவும் சமூகங்களுக்கு மத்தியில் நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்காகவும் பல்வேறு பணிகளை கடந்த சில காலங்களாக முன்னெடுத்து வருகின்றது.

ஒரு பக்கம் சமூக ஒற்றுமைப் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது மறுபக்கம் சக வாழ்வுப் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பிரகடனத்திலிருந்து காலத்தின் தேவையை கருத்திற் கொண்டு இச்சந்தர்ப்பத்தில் சில ஒழுக்கங்களை அனைவரது கவனத்திற்கும் கொண்டு வருகின்றோம்.

நாம் பிற சமூகத்தவருடைய இன்ப, துன்பங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களது வைபவங்கள், கொண்டாட்டங்கள், நிகழ்வுகள் என்பவற்றில் கலந்து கொள்வதற்கு பிற சமயத்தவர்களை அழைக்க வேண்டும் அவர்களை உபசரிக்க வேண்டும்.

பிற சமயத்தவர்களின் பொது நிகழ்வுகளில் நாம் கலந்து கொள்ள வேண்டும்.

அவர்களது பொதுக் கொண்டாட்டங்களில் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கவும் அன்பளிப்புக்களை வழங்கவும் முன்வர வேண்டும்.

பிற சமூகத்திலுள்ள அநாதைகள், ஏழைகள், அங்கவீனர்கள் போன்றோருக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு முன்வர வேண்டும்.

பொது சிரமதானங்கள், சூழல் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகள், தீமை ஒழிப்புப் போராட்டங்கள் முதலியவற்றில் பிற மதத்தவரோடு சேர்ந்து நாம் முனைப்போடு பங்கெடுக்க வேண்டும்.

வைத்தியசாலைகள், மடங்கள் முதலானவற்றுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும்

பிற சமூகத்தவர்கள் விரும்பும்போது எமது பள்ளிவாசல்களைப் பார்வையிடவும் சன்மார்க்க நிகழ்ச்சிகளை அவதானிக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.

பொதுவாக பிற சமயத்தவர்களின் மத உணர்வை மதித்து நடக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

– வியாபார கொடுக்கல்- வாங்கலில் ஈடுபடுபவர்கள் நம்பிக்கை நாணயத்தோடு நடந்து கொள்வது மாத்திரமல்ல, தாராளத்தன்மையோடு நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

– விழாக்கள், வைபவங்கள், பொது நிகழ்ச்சிகளின்போது எளிமையைக் கடைபிடிக்க முஸ்லிம்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

– ஆடம்பரத்தையும் படாடோபத்தையும் தவிர்ப்பது இன்றைய காலத்தின் தேவையும் சன்மார்க்கக் கடமையுமாகும்.

பிற சமயத்தவரோடு பழகி பிற சமூகத்தில் முஸ்லிம்கள் பற்றி நிலவுகின்ற தப்பபிப்பிராயங்களைச் சொல்லாலும் செயலாலும் நல்ல முன்மாதிரிகளாலும் களைய நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

இளம் தலைமுறையினரை சக வாழ்வைப் பேணி வாழுமாறு நெறிப்படுத்தவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

நமது அடிப்படையான மார்க்க நம்பிக்கைகளைப் பேணிய நிலையில் இத்தகைய நல்லுறவை வளர்ப்பது எமக்கு முன்னாலுள்ள மிகப் பெரிய சவாலாகும்.

இவை மாத்திரம் போதுமானதல்ல. கலந்துரையாடல், பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். நல்லுறவை வளர்க்கும் வகையில் இத்தகைய ஒழுங்குகள் பேணப்பட வேண்டும்.

அடுத்ததாக அல்லாஹ்வின் உதவியை நாட வேண்டும். அந்த வகையில் பாவங்களிலிருந்து நாம் விடுபட வேண்டும். தனிப்பட்ட குடும்ப, சமூக, சமூக உறவுகளில், கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நாம் இழைக்கும் தவறுகள், பிழைகள் அனைத்திலிருந்தும் விடுபட வேண்டும். பாவங்கள் மலிந்திருக்கும் இடத்தில் பல்வேறு பிரச்சினைகளும் சோதனைகளும் சூழ்ந்திருக்கும் என்பதை நாம் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.

இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்: “பாவம் முகத்தில் கருமையை ஏற்படுத்தும் உள்ளத்தில் இருளை ஏற்படுத்தும் உடலில் பலவீனத்தை உருவாக்கும் வாழ்வாதாரத்தில் அது குறைவை ஏற்படுத்தும் மனிதர்களுடைய உள்ளங்களில் வெறுப்பை விதைக்கும்.”

அல்லாஹ்வின் அன்பும் அவனது கிருபையும் மனிதர்களை வந்தடைவதற்குத் தடையாக இருப்பது பாவங்களே. எனவே நாம் பாவங்களிலிருந்து விடுபட வேண்டும். அல்லாஹ்வின் பார்வையில் ஒரு பாவி வீழ்ந்து விடுகிறான். அல்லாஹ்வின் பார்வையில் வீழ்ந்து விடும் ஒருவனை இந்த உலகத்தில் எவராலும் தூக்கி நிறுத்த முடியாது. பாவம் இழிவை ஏற்படுத்தும்.

“எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகிறானோ அவனை ஒருவராலும் கண்ணியப்படுத்த முடியாது.” (அல்ஹஜ்: 18 )

“எவன் என்னுடைய நல்லுபதேசங்களைப் புறக்கணிக்கின்றானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும்” (தாஹா: 124)

பாவிகளுடைய உள்ளத்திலே அல்லாஹ் அச்சத்தையும் பயத்தைப் தூவி விடுவான். பாவிகள் அச்சத்தோடும் பயத்தோடும்தான் இருப்பார்கள். எனவே, நாம் பாவங்களில் இருந்து விடுபட வேண்டும்.

கவலைகளுக்குத் தீர்வு, கஷ்டங்கள், நெருக்கடிகள் என்பவற்றுக்குத் தீர்வு பாவங்களில் இருந்து விடுபடுவது மாத்திரமல்ல, செய்த பாவங்களுக்காக பாவ மன்னிப்புக் கோரி, இஸ்திஃபார் செய்து அல்லாஹ்வின் பக்கம் மீளுவதாகும்.

யார் இஸ்திஃபாரைக் கடைப்பிடிக்கிறாரோ அல்லாஹ் அவருடைய அனைத்துக் கவலைகளுக்கும் தீர்வைக் கொடுப்பான் நெருக்கடிகளை நீக்கி வைப்பான் அவர் எதிர்பாராத விதமாக வாழ்வாதாரத்தைக் கொடுப்பான் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உத்தரவாதமளித்துள்ளார்கள்.(அபூ தாவூத், இப்னு மாஜா)

இவற்றோடு முஸ்லிம்களாகிள நாம் எமக்கு மத்தியில் ஒற்றுமையைப் பலப்படுத்த வேண்டும். முஸ்லிம் சமூகம் ஈயத்தினால் வார்க்கப்பட்ட ஒரு கட்டடத்தைப் போல ஐக்கியமாக, ஒற்றுமையாக இருக்க வேண்டும் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கக் கூடாது குறை சொல்வதும் சாடுவதும் வசைபாடுவதும் பரஸ்பரம் குற்றச்சாட்டை சுமத்துவதும் முழு முஸ்லிம் சமூகத்தையும் பலவீனப்படுத்தும்.

“உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தையரியத்தை இழந்து உங்கள் சக்தி (ஆற்றல்) போய்விடும்.” (அல்அன்பால்: 46) என அல்குர்ஆன் எச்சரிக்கிறது.

எனவே, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் ஓர் அணியில் நிற்பது அவசியம்.

எப்போதும் திக்ருகள், அவ்ராதுகள், திலாவதுல் குர்ஆன் என்பவற்றில் ஈடுபட வேண்டும். குறிப்பாக அனர்த்தங்கள், கஷ்ட நஷ்டங்களின்போது ஓதக்கூடிய துஆக்களை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்கள். அவற்றை அதிகம் ஓத வேண்டும். அல்குர்ஆனோடு இறுக்கமான, நெருக்கமான தொடர்பைப் பேண வேண்டும். தொழுகையில் பேணுதலாக இருக்க வேண்டும்.

“நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு ஏதாவது கஷ்ட, நஷ்டம் ஏற்பட்டு விட்டால் உடனடியாக தொழுகைக்கு விரைவார்கள்” (சுனன் அபூதாவூத்) என சஹாபிகள் குறிப்பிடுகின்றார்கள்.

இவை அனைத்துக்கும் மேலாக நாம் எப்போதும் நிதானம், பொறுமை, சகிப்புத்தன்மையோடு இருக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் அல்லாஹ்வின் உதவியினால் மிகவும் முதிர்ச்சியோடும் பக்குவத்தோடும் நிதானத்தோடும் சகிப்புத்தன்மையோடும் நடந்து கொள்ளும் இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தை நாம் மெச்ச வேண்டும் இந்த நிலையைத் தொடர்ந்தும் உத்தரவாதப்படுத்துகின்ற பொறுப்பு ஆலிம்கள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் இருக்கிறது.

“நிச்சயமாக அல்லாஹுத் தஆலா பொறுமையாளர்களுடன் இருக்கிறான்” என்பதனை நாம் மனதில் கொண்டு பொறுமையோடு தொலைநோக்கோடு ஒற்றுமையாக செயற்பட கடமைப்பட்டிருக்கிறோம்.”

மட்டுமன்றி, நாம் முன்மாதிரிமிக்கவர்களாக இருக்க வேண்டும். ஆயிரம் பேர் சேர்ந்து தமது பேச்சினால் ஒரு மனிதனில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைவிட ஒரு மனிதன் தன் முன்மாதிரியான வாழ்க்கையினால் பத்தாயிரம் பேரில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

பேச்சு, விரிவுரை, பயான், ஹதீஸ் இவை அனைத்தையும்விட முன்மாதிரியான வாழ்க்கை மிகப் பெரிய தாக்கத்தை, மாற்றத்தை, விளைவை ஏற்படுத்தும் என்பதனை ஆழமாகப் புரிந்து கொண்டு முன்மாதிரியாக வாழக் கடமைப்பட்டுள்ளோம்.

ஆண்கள், பெண்கள், யுவதிகள், இளைஞர்கள், சமுதாயத் தலைமைகள் அனைவரும் சமூகத்தில் முன்மாதிரியாகவம் உயர்ந்த பண்பாடுகளைப் பேணியும் வாழ வேண்டிய ஒரு காலம் இதுவென்றால் அது மிகையாது. அந்த வகையில் எமது தாய்நாடான இந்நாட்டில் அமைதி, நிம்மதி, சாந்தி, சமாதானம் நிலவுவதற்காக எமக்கு மத்தியிலுள்ள கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் என்பவற்றை அழகான கலந்துரையாடல்களின் ஊடாக, பேச்சுவார்த்தைகளின் ஊடாகத் தீர்த்துக் கொள்வதற்கும் களைவதற்கும், முயற்சிக்கின்ற அதேநேரம் அடுத்த சமூகங்களுக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களாக, சக வாழ்வுக்கு வரைவிலக்கணமாக நாம் மாறக் கடமைப்பட்டுள்ளோம்.

இவற்றோடு ஒரு முஃமினுடைய மிகப் பெரும் ஆயுதமாக இருப்பது பிரார்த்தனையாகும். இபாதத்களின் தலையாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் துஆவை வர்ணித்திருக்கிறார்கள். அதனூடாக நமது நாட்டில் வாழ்கின்ற எல்லா சமூகங்களுக்கு மத்தியிலும் சமாதானமும் நல்லிணக்கமும் நிலவுவதற்காக நாம் பிரார்த்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

எனவே, சவால்களை சந்தர்ப்பங்களாக மாற்றிக் கொள்ளவும் சோதனைகளை வென்று சாதனைகள் படைக்கவும் திடசங்கற்பம் பூணுவோமாக!