முஸ்லிம் காங்கிரஸ் மனப்பால் குடிப்பது போல் குடைசாய்வதற்கு மக்கள் காங்கிரஸ் அத்திவாரமின்றி கட்டியெழுப்பப்படவில்லை

“வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், தனது மாவட்ட அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளில் முஸ்லிம் காங்கிரசுடன் தாவி செயற்படத் தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வன்னியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மஸ்தான் மற்றும் அவரது கட்சித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹுனைஸ் பாரூக் ஆகியோரும் நேற்று இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடியுமுள்ளனர்.

கட்சியின் தலைமையகமான தாருஸ் ஸலாமில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளில் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஒரே குழுவாக இயங்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் விருப்பம் தெரிவித்தார். அதனை மஸ்தான் அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்”.

என்ற செய்தியுடன் “அமைச்சர் ரிஷாதிற்கு எதிரான கூட்டணி” என்ற தலைப்புகளில் இணையங்களில் செய்திகள் வலம் வருகின்றமை காணக்கூடியதாக இருக்கின்றது.

இக்குறித்த மஸ்தான் எனப்படுபவரும் ஹக்கீம் மற்றும் ஹுனைஸ் ஆகியோரும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கட்சி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறுவதைத் தடுக்கும் வகையில் கடந்த பொதுத் தேர்தலின் போது தனித்தனி முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் வன்னி மாவட்டத்தில் இவர்களின் கூட்டிணைவு அமைச்சர் ரிஷாத் பதியுதீனிற்கு எதிரான கூட்டணியொன்றுக்கான அத்திவாரமாக சிலர் கருதினாலும், அவ்வாறு எளிதில் குடைசாய்வதற்க்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒன்றும் அத்திவாரமின்றி கட்டியெழுப்பப்படவில்லை என்பதனை தீய சக்திகள் நன்கு கவனத்தில் வைத்திருக்கட்டும்.

இதற்கு முன்பு குறித்த வன்னியில் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் வன்னி மக்களுக்கென எதனை செய்தீர்கள் என கேள்வி எழுப்புவது ஒன்றும் மனசாட்சிற்கு விரோதமாகப்படவில்லை என்றே கூற வேண்டும்.

உலக மகா நடிகர் சங்கமாகவே தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர்களும் தலைவரும் நடித்து வருகின்றனர். குறித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை மக்கள் தூற்றுவதாகவும், அவர் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளில் தலையிட்டதால் (அதாவது அளுத்கம இனக்கலவரம்) தேசத் துரோகி என நாமம் பெற்றும் கூட தன்னலம் பார்க்காது சிறுபான்மையாய் தள்ளி நிற்கும் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்ததாகவும் அண்மையில் பிரபல தமிழ் பத்திரிகை ஒன்றில் கட்டுரை ஒன்று பிரசுரமாகியிருந்தது.

உண்மையில், அளுத்கம கலவரம் குறித்து ஹக்கீம் எப்போது தலையிட்டார் என்பதே அளுத்கம, தர்கா நகர் மக்களின் கேள்வியாகும். அல்-ஜெசீரா ஊடகத்தினருக்கு அமைச்சர் ஹக்கீம் செய்தி வழங்கும் போது தர்ஹா நகர் 90% ஆக தீக்கரியாக்கப்பட்டு விட்டதென்பதை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களும் கட்சி நடிகர்களும் தெரியாமலிருக்கலாம் ஆனால், அவ்வூர்வாசிகள் என்ற முறையில் தான் நன்கு அறிவேன்.

இன்னும், அன்றைய அரசு தேசத் துரோகியாய் ஹக்கீம் இனைப் பார்ததாயின் மஹிந்த அரசினை கைவிடாது தாங்கி நின்று இறுதித் தருணத்தில் நல்லாட்சிக் கப்பலுக்கு தாவியதன் நோக்கத்தினையும் நான் சொல்லி மக்களாகிய நீங்கள் அறிந்திருக்கத் தேவையில்லை.

மேலும், ஹக்கீமின் குறித்த செயலினால் தான் அளுத்கம இனக்கலவரம் ஓய்ந்தது எனின், ஹக்கீமின் அளுத்கம, தர்கா நகர் கலவரத்தளத்திற்கு சமூகமளித்த போது மக்கள் ஏன் கொதித்தெழுந்தனர்? என்ற கேள்வியினையும் முன்வைக்கின்றேன்.

இப்படிப்பட்ட உலக மகா நடிகர் சங்கத்தினைக் கொண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் இற்கு தாவுவதற்கு நடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதனை மக்கள் உணர்வீர்களாயின் அதுவே சமூகத்திற்கான மாபெரும் வெற்றி என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

மக்களே! விழிப்படைய வைப்பதை மட்டும் தான் இப்பேனை முனையால் இப்போதைக்கு வரைய முடியும்…