உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலான இரண்டாம் கட்டக் கூட்டம் இன்று!

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலான இரண்டாம் கட்டக் கூட்டம் இன்று!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு இன்று(6) செவ்வாய்க்கிழமை கொழும்பில் கூடவுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச்சில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய அரசின் பிரதான பங்காளிக்கட்சியான ஐக்கிய  தேசியக் கட்சி, பழைய முறையான விகிதாசார முறைப்படி தேர்தலை நடத்தவேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

எல்லை நிர்ணயம் உட்பட தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் கடந்த அரசு முறையான அணுகுமுறையை பின்பற்றவில்லை என்ற விடயத்தைச் சுட்டிக்காட்டியே ஐக்கிய தேசியக்  கட்சி இவ்வாறு வலியுறுத்தி வருகின்றது.

அத்தோடு, புதிய முறையில் தேர்தல் நடத்தப்படவேண்டுமானால், எதிர்வரும் நவம்பருக்குள் புதிய நடைமுறையில் திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்றும்,  அவ்வாறு முடியாவிட்டால் பழைய முறையிலேயே தேர்தலை நடத்தவேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியினது அழுத்தக் கோரிக்கை.

எனினும், திருத்தியமைக்கப்பட்ட புதியமுறையிலேயே, அதாவது கலப்பு முறையிலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என தேசிய அரசின் மற்றுமொரு பங்காளியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரியுள்ளது. இதனால் உள்ளூராட்சி சபைத் தேர்தல் எந்தமுறையில் நடத்தப்படவேண்டும் என்ற விடயத்தில் பிரதான இரு கட்சிகளுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, உள்ளூராட்சி சபைத் தேர்தலை எந்தமுறையில் நடத்தவேண்டும், திருத்தங்களை மேற்கொள்ளலாமா என்பது உட்படப் பல விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சரான பைசர் முஸ்தபா தலைமையிலான இந்த அமைச்சரவை உப குழுவில், அமைச்சர்களான மனோ கணேசன், ரவுப் ஹக்கீம், சுசில் பிரேமஜயந்த, கபீர் ஹாசீம், துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், இக்குழுவின் முதலாவது கூட்டத்தின்போது எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையிலேயே இன்று இரண்டாம் கட்ட சந்திப்பு நடக்கவுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சில் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அமைச்சர் சுசில், பிரதமருடன் ஜப்பான் சென்றுள்ளதால் அவரின் சார்பில் பிரதிநிதியொருவர் பங்கேற்கும் சாத்தியம் அதிகளவு உள்ளதாக காணப்படுகிறது.

 

(riz)