சுமாத்ராவில் மற்றுமோர் இந்தோனேசிய ஹெலிகாப்டர் மாயம்

இந்தோனேசியாவில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அடிக்கடி மாயமாகி வருவது சோகத்தை ஏற்படுத்திய நிலையில், 5 பேருடன் சென்ற இந்தோனேசிய ஹெலிகாப்டர் ஒன்று சுமாத்ராவில் மாயமாகி உள்ளது.

ஒற்றை என்ஜின் கொண்ட யூரோகாப்டர் ஈ.சி.-130 என்ற அந்த ஹெலிகாப்டர் பி.டி.பெனர்பன்கன் அங்காசா நிறுவனத்திற்கு சொந்தமானது. நேற்று மதியம் 12.20 மணியளவில் சுமத்ரா சமோசர் தீவிலிருந்து மெடான் சிட்டி குவாலாநாமு விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த அந்த ஹெலிகாப்டர் பறக்க துவங்கிய ஒரு மணி நேரத்திற்கு பின் திடீரென விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. குறித்த ஹெலிகாப்டரில் ஒரு விமானி, ஒரு என்ஜினியர், 3 பயணிகளும் இருந்தனர். குவாலாநாமு விமான நிலையத்தில் தரையிறங்க 10 நிமிடங்களே இருந்த நிலையில் மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டரை தேடும் முயற்சியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர் இந்தோனேசியாவில் தொடர்ந்து விமான விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.

கடந்த டிசம்பர் மாதம் 162 பேருடன் சென்ற ஏர் ஏசியா விமானம் மாயமானதும், இந்த மாத துவக்கத்தில் சுலாவெசி தீவில் குட்டிரக பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

(riz)