இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற வேண்டும் என கோடான கோடி ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மற்ற நாடுகளுக்கிடையே நடைபெறும் தொடர்போல் இந்த தொடர் அவ்வளவு எளிதாக நடைபெற்று விடாது.
இரண்டு நாடும் கிரிக்கெட் வாரியம் தொடரை நடத்த சம்மதித்தாலும் அந்தந்த நாட்டின் மத்திய அரசிடம் இருநாட்டு கிரிக்கெட் வாரியமும் பாதுகாப்பு குறித்து ஒப்புதல் அளிக்க வேண்டும். இருநாட்டின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்த பின்னரே மத்திய அரசு சம்மதம் தெரிவிக்கும்.
அப்படிதான் வரும் டிசம்பர் மாதம் இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற கிரிக்கெட் வாரியங்கள் முடிவு செய்தது. ஆனால், பஞ்சாப் மாநிலத்தில் புகுந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி்யதால் இந்த தொடருக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது.
பலமுறை பாகிஸ்தான் சார்பில் பேச்சுவார்த்தை மற்றும் அறிக்கை வெளியானபோது இந்தியா இந்த தொடர் குறித்து சாதகமான பதில் கூறவில்லை. இதனால் வெறுப்படைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவுடன் நாங்கள் கிரிக்கெட் தொடர் நடத்தாவிட்டால் நாங்கள் அழிந்து விடமாட்டோம். இதற்கு மேல் பேச்சுவார்த்தை கிடையாது என்றது.
ஆனால், தற்போது டெஸ்ட் போட்டி நடைபெற வாய்ப்பில்லை. ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடைபெற வாய்ப்பிருக்கிறது. அதற்கேற்ப அட்டவணையை மாற்றியமைக்கலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கு எதிரான தொடரை இழக்க மனமில்லாத பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கான் கடந்த வாரம் இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடர் நடைபெற வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்த தொடர் குறுகிய காலமாக இருக்கும் என்று சூசகமாக தெரிவித்தார்.
இந்நிலையில் ‘‘தொடர் நடந்தால் டி20 மற்றும் ஒருநாள் தொடர் மட்டுமே நடைபெறும்படி போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது’’ என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தகவல்கள் தெரித்தன.
இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடர் நடைபெற்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அதிக அளவு நிதி கிடைக்கும். இதனால் துபாயில் நடைபெற இருக்கும் ஐ.சி.சி. கூட்டத்திற்கிடையே இதுகுறித்து விவாதிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(riz)