இலங்கை ‘ஏ’ அணியை ‘ஒயிட்-வாஷ்’ செய்து வெற்றி வாகை சூடியது நியூசிலாந்து

இலங்கை ’ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை நியூசிலாந்து ’ஏ’ அணி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இலங்கை ‘ஏ’ அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து ‘ஏ’ அணியுடன் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது.

இலங்கை ‘ஏ’ அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

தொடர்ந்து 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டிகளில் முறையே 15 ஓட்டங்கள், 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இன்று நடந்த கடைசி மற்றும் 4வது ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றியாவது இலங்கை அணி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தப் போட்டியிலும் 172 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

45 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்ட இந்தப் போட்டியில் நியூசிலாந்து ‘ஏ’ அணி பிரேஸ்வெல் (53), சண்ட்னெர் (70) ஆகியோரின் அரைசதத்தால் 5 விக்கெட்டுக்கு 299 ஓட்டங்கள் குவித்தது.

300 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இலங்கை அணி 25.4 ஓவர்களுக்கு 127 ஓட்டங்களுக்கு சுருண்டது. குணத்திலகா அதிகபட்சமாக 39 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனால் 172 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து ‘ஏ’ அணி, 4-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி இலங்கை ‘ஏ’ அணியை ‘ஒயிட்-வாஷ்’ செய்தது.