ரஷியத் தூதரகம் மீது கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைக் குண்டுத் தாக்குதல்

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ரஷியத் தூதரகம் மீது கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைக் குண்டுகளைக் கொண்டு செவ்வாய்க்கிழமை தாக்குதல் நிகழ்த்தினர்.

சிரியாவில் ரஷியா மேற்கொண்டு வரும் வான்வழித் தாக்குதல்களுக்கு நன்றி தெரிவித்து, நூற்றுக்கணக்கான அரசு ஆதரவாளர்கள் அந்தத் தூதரகம் முன்பு கூடியபோது இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அங்கிருந்த செய்தியாளர்கள் கூறுகையில்;

ரஷியத் தூதரகம் முன்பு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கிளர்ச்சியாளர்கள் பகுதியிலிருந்து ஏவுகணைக் குண்டு தூதரகத்தில் விழுந்து வெடித்தது.

இதையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பீதியில் அலறியடித்தபடி ஓடினர். அப்போது மேலும் ஒரு குண்டு அந்தப் பகுதியில் விழுந்து வெடித்தது.

இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுத விநியோகம்  பெய்ரூட், அக். 13: சிரியாவில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிப் படைகள் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் எதிராகச் சண்டையிட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில் விமானங்கள் மூலம் ஆயுதங்களை விநியோகித்தது.

ரஷிய வான்வழித் தாக்குதல்களின் உதவியுடன் அந்த நாட்டின் சில  பகுதிகளில் அரசுப் படையினர் முன்னேற்றமடைந்து வரும் வேளையில், கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க விமானங்கள் வான்வழியாக ஆயுத உதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிரியா நாட்டின் அதிபர் பாஷர் அல்-ஆசாதின் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவோர் மீது ரஷியா கடந்த மாதம் விமானப்படைத் தாக்குதலை தொடங்கியது.

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை விடுத்து சிரியா அரசை எதிர்ப்போர் மீது ரஷியா அவ்வபோது குறி வைத்துத் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகள் குற்றம் சாட்டின.

மேலும் அதிபர் அல்-அஸாதை ஆட்சியிலிருந்து அகற்றுவதே கடந்த நான்கு ஆண்டுகால போராட்டத்துக்கு முற்றுப் புள்ளியாகும் என்று தெரிவித்தன.

இந்நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் அல்லாதோரின் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துவதை ரஷியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஐரோப்பிய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் திங்கள்கிழமை கேட்டுக் கொண்டனர்.

ஐ.எஸ்.பயங்கரவாதிகள் அல்லாதோருக்கு 50 டன் ஆயுதங்களை வழங்கியதாக அமெரிக்க விமானப் படை அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.