ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இந்திய – பாகிஸ்தான் மோதல்

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் தூதர் மாலீஹா லோதி நேற்று எழுப்பினார்.

அப்போது அவர் பேசும்போது, “காஷ்மீர் பிரச்சினையில் காஷ்மீர் மக்கள் ஒருங்கிணைந்தவர்கள் ஆவார்கள். காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அவர்கள் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். காஷ்மீர் பிரச்சினையில் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு, காஷ்மீர் மக்களுடன் கலந்தாலோசனை கூடாது என்று முன்நிபந்தனை விதிப்பது ஏற்கத்தக்கதல்ல. அது எதிர்விளைவை ஏற்படுத்தும்” என கூறினார்.

பாகிஸ்தான் தூதரின் இந்த பேச்சு, இந்தியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனே தனது பதில் அளிக்கும் உரிமையை பயன்படுத்தி ஐ.நா.வுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் அபிஷேக் சிங் சூடான பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்;

காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகத்தான் இருந்து வந்துள்ளது. இந்த நிலைதான் என்றும் தொடரும். அதன் ஒரு பகுதியை சட்ட விரோதமாக ஒரு நாடு ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு, இத்தகைய கருத்துக்களை வெளியிடுவது விந்தையாக உள்ளது. காஷ்மீர் பற்றிய பாகிஸ்தானின் கருத்துக்கள், முறையற்றவை. அது இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகும். எனவே அதை நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம்.

கடந்த சில வாரங்களில் பல முறை சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்கள் நடத்தி உயிர்ப்பலிகளை ஏற்படுத்தியது வருத்தம் அளிப்பதாகும். எனத் தெரிவித்தார்.

கடந்த மாதம் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசியதை அபிஷேக் சிங் சுட்டிக்காட்டி, “பாகிஸ்தான் பிரதமர் அளித்துள்ள 4 அம்சங்கள் இந்தியாவுக்கு தேவையில்லை. ஒரே ஒரு அம்சம் போதும். தீவிரவாதத்தை கைவிடுங்கள். நாம் ஒன்றாக அமர்ந்து பேசலாம்” என கூறியதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தூதர் மாலீஹா லோதியின் பேச்சை தொடர்ந்து ஐ.நா.வுக்கான இந்திய தூதர் அசோக் முகர்ஜி கருத்து தெரிவித்தார். அப்போது அவர், “இன்றைக்கு நாம் விவாதிக்கிற பொருளுக்கு வெளியே சென்று, பாகிஸ்தான் தூதர் பேசி இருப்பது துரதிர்ஷ்டவசமானது. பாகிஸ்தானுடன் நாங்கள் தூதரக உறவு வைத்திருக்கிறோம். அதன் வடிவில்தான் இந்த பிரச்சினைகள் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். வேறெங்கும் எடுத்துச்செல்லக்கூடாது” என கூறினார்.

காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.