இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக ஜகீர் விருப்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜாகீர்கான்.

தோள்பட்டை காயத்தில் சிக்கி தவித்த அவரை தேர்வுக்குழு கண்டுகொள்ளவில்லை. மேலும் அவர் பார்ம் இன்றியும் இருந்தார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜாகீர்கான் நேற்று அறிவித்தார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணியில் விளையாடுவார். அத்துடன் கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக விலகுவார்.

ஓய்வு முடிவை அறிவித்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், எனது 20 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் பல பசுமையான நினைவுகள் உள்ளன. 2011–ம் ஆண்டு உலககோப்பையை வென்றது மறக்க முடியாததாகும்.

எனது பிறந்த நாளின் போது (அக்.7) ஓய்வு முடிவு குறித்து தாய்–தந்தையிடம் கூறினேன். அதன்பின் சச்சின் தெண்டுல்கர், யுவராஜ்சிங் மற்றும் சில நண்பர்களிடம் தெரிவித்தேன். உடல் ஒத்துழைக்காததால் இந்த முடிவை எடுத்தேன் என்றார்.

இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக ஆகுவீர்களா? என்று நிருபர்கள் ஜாகீர்கானிடம் கேட்டனர். அதற்கு அவர் தனது விருப்பத்தை மறைமுகமாக தெரிவித்தார். அவர் கூறுகையில், நான் ஏற்கனவே வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி தான் வருகிறேன். இதனால் நான் தயாராகவே இருக்கிறேன் என்றார்.

ஜாகீர்கானுக்கு கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.