பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோனுக்கு நீதிமன்ற அழைப்பாணை

பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்ற அழைப்பாணை வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பில் பொலிஸ் சட்டப்பிரிவின் பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோனுக்கு கடந்த ஒன்பதாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.

எனினும் அவர் அக்காலப்பகுதியில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன் காரணமாக கடந்த 16ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸ் மா அதிபருக்கு மீள் அழைப்பாணை அனுப்பப்பட்டது.

பொலிஸ்’ மா அதிபருக்கு முதல் தடவை நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்ட சமயத்தில் பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி, பொலிஸ் மா அதிபரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பில் தெரிவித்திருந்தால், இரண்டாவது தடவை அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருக்காது.

எனினும் சட்டப்பிரிவின் பணிப்பாளர் உட்பட அதன் அதிகாரிகள் அசமந்த போக்கில் செயற்பட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே பொலிஸ் மா அதிபருக்கு இரண்டாம் தடவையாகவும் நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டது.

இதற்குப் பதிலடியாக பொலிஸ் சட்டப்பிரிவின் பணிப்பாளருடைய பதவி இன்று(21) பறிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பிரிவின் ஏனைய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தவும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.